செய்திகள்

மனைவியை கொன்று தற்கொலைக்கு முயன்ற தொழிலாளிக்கு தீவிர சிகிச்சை

கோவை அருகே மனைவியை கொன்று விட்டு தற்கொலைக்கு முயன்ற தொழிலாளிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மாலை மலர்

கவுண்டம்பாளையம்:

கோவை தடாகம் அருகே உள்ள பாப்பநாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர் வெங்கடாசலம் (வயது 75). கூலித் தொழிலாளி.

இவரது முதல் மனைவி கடந்த 30 வருடங்களுக்கு முன்பு பிரிந்து சென்று விட்டார். அதன் பின்னர் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு கலாவதி (65) என்ற பெண்ணை 2-வதாக திருமணம் செய்து வாழ்ந்து வந்தார்.

வெங்கடாசலம் தினசரி மது குடித்து விட்டு வந்து மனைவியிடம் அடிக்கடி தகராறு செய்து வந்தார். இதனால் கலாவதி கணவரை பிரிந்து மடத்தூர் பகுதியில் தனியாக வசித்து வந்தார்.

வெங்கடாசலம் நேற்று இரவு மது குடித்து விட்டு போதை தலைக்கேறிய நிலையில் கலாவதி வசிக்கும் வீட்டுக்கு சென்றார். பின்னர் தன்னுடன் வருமாறு அழைத்தார். ஆனால் கலாவதி வர மறுத்து விட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த வெங்கடாசலம் தான் வைத்து இருந்த கத்தியை எடுத்து கலாவதியின் வயிற்றில் சரமாரியாக குத்தினார். இதில் நிலைகுலைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் உயிருக்கு போராடிய கலாவதியை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். ஆனால் வரும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். ஆத்திரத்தில் மனைவியை கத்தியால் குத்தியதால் மனவேதனை அடைந்த வெங்கடாசலம் மதுவில் வி‌ஷத்தை கலந்து குடித்தார். சிறிது நேரத்தில் மயங்கினார்.

இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரையும் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள வெங்கடாசலத்துக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இது குறித்து தடாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.