செய்திகள்

மீன்கள் செத்து மிதந்தது குறித்து விசாரணைக்கு உத்தரவு- கலெக்டர் பேட்டி

மேட்டூர் நீர்தேக்க பகுதியில் மீன்கள் செத்து மிதந்தது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று சேலம் மாவட்ட கலெக்டர் ரோகிணி தெரிவித்துள்ளார்.

மாலை மலர்

சேலம்:

சேலம் குமாரசாமிப்பட்டியில் உள்ள வனத்துறை அலுவலகத்தில் வனத்துறை மேம்பாட்டு கட்டிட அடிக்கல் நாட்டு விழாவும், வனத்துறை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் உபகரணங்கள் வழங்கும் விழாவும் இன்று நடந்தது.

இந்த விழாவில் சேலம் மாவட்ட கலெக்டர் ரோகிணி கலந்து கொண்டு புதிய கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டி பூமி பூஜையை தொடங்கி வைத்தார். பின்னர் உபகரணங்களையும் வழங்கினார்.

அப்போது அவரிடம் மேட்டூர் நீர்தேக்க பகுதியில் மீன்கள் செத்து மிதந்தது குறித்து கேள்வி கேட்டனர்.

அதற்கு பதில் அளித்து கலெக்டர் ரோகிணி கூறியதாவது:-

மேட்டூர் நீர்தேக்க பகுதியில் மீன்கள் செத்து தண்ணீரில் மிதந்ததற்கான காரணங்கள் குறித்து விசாரணை நடத்த பொதுப்பணித்துறை மற்றும் மாசு கட்டுப்பாடு வாரியத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அவர்கள் உரிய விசாரணை நடத்தி வருகிறார்கள். அந்த விசாரணை அறிக்கை வந்த பிறகு மீனவர்களின் நலன்களை பாதுகாக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.

கேள்வி:- தனியார் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறிய ரசாயனக் கழிவுநீர் மேட்டூர் நீர்தேக்க பகுதியில் கலந்ததால் மீன்கள் செத்து மிதந்ததாக கூறப்படுகிறதே.

பதில்:- மீன்கள் செத்து மிதந்த பகுதியில் இருந்து தண்ணீர் மாதிரி எடுத்து ஆய்வுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. அந்த ஆய்வு முடிவு வந்த பிறகுதான் மீன்கள் இறந்த இடத்தில் உள்ள தண்ணீரில் ரசாயன நீர் கலந்ததா? இல்லையா? என்பது தெரியவரும். ரசாயன நீர் கலந்ததாக ஆய்வு முடிவு தெரியவந்தால் அந்த கழிவுநீர் இனிமேல் நீர்தேக்க பகுதியில் தேங்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.