கணவருடன் புகார் கொடுக்க வந்த லட்சுமிபிரபா 
செய்திகள்

பேராசிரியர் நியமனம் குறித்து விசாரித்தால் உண்மைகள் வெளிவரும்: துணைவேந்தர் மீது புகார் அளித்த பெண் பேட்டி

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் நியமனம் குறித்து விசாரணை நடத்தினால் உண்மைகள் வெளி வரும் என துணைவேந்தர் மீது புகார் அளித்த பெண் பேட்டியளித்துள்ளார்.

துணை வேந்தர் மீது புகார் கொடுத்த கோவை வடவள்ளி நவாவூர் சுல்தான் புரத்தை சேர்ந்த லட்சுமி பிரபா கூறியதாவது-

நான் கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தில் உயிர் வேதியியல் பாடப்பிரிவில் முனைவர் பட்டம் பெற்றுள்ளேன்.

இப்பல்கலைக் கழகத்தில் உதவி பேராசிரியை இடம் காலியாக இருப்பதாக அறிந்தேன். இந்த பணிக்கு விண்ணப்பித்தேன். ஆனால் பணி கொடுக்காமல் இழுத்தடித்து வந்தனர். இது தொடர்பாக கடந்த 2014-ம் ஆண்டு உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் போஸ்டர் டாக்டரேட் பிலோசிப்பார் உமன் பட்டத்திற்கு இப்பல்கலைக கழகத்தில் விண்ணப்பித்தேன். அவர்கள் இதனை மானிய குழுவுக்கு அனுப்ப வேண்டும். ஆனால் இதனை அனுப்பாமல் நிராகரித்து வந்தனர்.

கடந்த 20 வருடமாக எனது கணவர் பாரதியார் பல்கலைக் கழகத்தில் தொகுப்பூதிய அடிப்படையில் வேலை பார்த்து வந்தார். அவரை கடந்த பிப்ரவரி மாதம் 23-ந் தேதி வேலையை விட்டு நீக்கி விட்டனர்.

மேலும் அவரை விசாரணை என்ற பெயரில் அழைத்து அலைக்கழித்தனர். இது குறித்து தேசிய தாழ்த்தப்பேட்டார் நல வாரியத்திற்கு மனு அளித்தேன். அவர்கள் விசாரணை நடத்தினர்.

எனது ஆராய்ச்சி படிப்புக்கு இடையூறு செய்ய கூடாது என உத்தரவிட்டனர். ஆனால் பல்கலைக் கழகத்தில் உதவி பேராசிரியை பணி இடம் இல்லை என பல்கலைக் கழகத்தினர் தெரிவித்து விட்டனர்.

நான் எனது படிப்பு தொடர்பான விவரங்களை பல்கலைக் கழக மானிய குழுவுக்கு அனுப்பவில்லை. நான் இது பற்றி கேட்ட போது அனுப்பி இருப்பதாக கூறினார்கள். இது தொடர்பாக கூரியர் எண் தருவதாக கூறினர். உடனே நான் கூரியர் நிறுவனத்தில் வேலை பார்க்க வரவில்லை என தெரிவித்து விட்டேன்.

எனது கணவரையும் வேலையில் இருந்து நீக்கி விட்டதால் பொருளாதார ரீதியாக பெரிதும் பாதிக்கப்பட்டேன். இது தொடர்பாக கடந்த அக்டோபர் மாதம் 13-ந் தேதி கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் துணை வேந்தருக்கு எதிராக புகார் அளித்தேன்.

இந்த நிலையில் தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணைய துணை தலைவர் முருகன் நேற்று விசாரணை நடத்தினார். அதன் பேரில் துணை வேந்தர் மீது நேற்று இரவு 11 மணிக்கு வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

துணை வேந்தர் மீது வன் கொடுமை, பொருளாதார பின்னடைவு ஏற்படுத்துதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தில் பேராசிரியர் நியமனம் தொடர்பாக விசாரணை நடத்தினால் பல உண்மை வெளி வரும். துணை வேந்தர் மீது வழக்கு பதிவு செய்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மூர்த்தி, டி.எஸ்.பி. வேல் முருகன் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

தமிழகத்தில் பல்கலை கழக துணை வேந்தர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பது இதுவே முதல் முறை என கருதுகிறேன்.