கோவை கோட்ட வனப்பகுதி பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்துக்கு உட்பட்ட ஆனைக்கட்டி மலைப்பகுதியில் இருந்து கோபனாரி செல்லும் வழியில் உள்ள விவசாய நிலத்தில் கடந்த சில நாட்களாக ஒரு காட்டு யானை சுற்றித்திரிந்தது. அது, அந்த பகுதியை விட்டு வேறு எங்கும் செல்லாமல் இருந்தது.
இது குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று அந்த யானைக்கு சிகிச்சை அளித்தனர். அவர்கள், பலாப்பழம், வாழைப்பழம் உள்ளிட்ட பழங்களுக்குள் மாத்திரைகளை வைத்து கொடுத்தனர். இதனால் அந்த யானைக்கு உடல்நிலை தேறி வனப்பகுதிக்குள் சென்றது. நேற்று முன்தினம் காலை அந்த யானை மீண்டும் கோபனாரி பிரிவு வனப்பகுதியில் சுற்றியது. பின்னர் சோர்வடைந்த நிலையில் திடீரென்று அங்கேயே படுத்துக்கொண்டது.
இதனால் அந்த யானையால் சாப்பிட முடியவில்லை. எனவே அது சோர்வாக படுத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து கால்நடை மருத்துவர்கள் அந்த யானைக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். அதற்கு 35 பாட்டில் குளுக்கோஸ், சத்து மாத்திரைகள், நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகள், வலி நிவாரணிகள் ஆகியவை ஊசி மூலம் செலுத்தப்பட்டது.