ஜொகனஸ்பெர்க்:
இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்ரிக்கா அணியுடன் மூன்று டெஸ்ட், ஆறு ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் அடங்கிய தொடரில் விளையாட தென்னாப்ரிக்கா சென்றுள்ளது. முதலாவதாக டெஸ்ட் தொடர் தொடங்கியது. முதல் டெஸ்ட் போட்டி 5-ம் தேதி தொடங்கியது.
இப்போட்டியில், விளையாடிவரும் தென்னாப்ரிக்கா அணியில் முண்ணனி வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின் சேர்க்கப்பட்டிருந்தார். ஸ்டெயின் தனது சிறப்பான பந்துவீச்சின் மூலம் இந்திய அணியின் பேட்ஸ்மேன்களான ஷிகர் தவான் மற்றும் விரிதிமான் சஹா ஆகியோரை முதல் இன்னிங்சில் அவுட் ஆக்கினார். இதன்மூலம் 20 போட்டிகளில் 100 விக்கெட் வீழ்த்திய ஸ்டெயின், அதிவேகமாக 100 விக்கெட் வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறினார்.
ஆனால் இந்த சாதனையை படைத்த சிறிது நேரத்தில் அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. சிறப்பாக பந்துவீசி கொண்டிருந்த அவர் 18-வது ஓவரை வீசிக்கொண்டிருந்த போது இடது குதிகாலில் ஏற்பட்ட காயம் காரணமாக மைதானத்தை விட்டு இடையிலேயே வெளியேறினார். சிறிய காயமாக இருக்கும் என கூறப்பட்டுவந்த நிலையில், குதிகால் பகுதி தசையில் காயம் ஏற்பட்டுள்ளது தற்போது தெரிய வந்துள்ளது.
இதனால் இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் அவர் பந்து வீச மாட்டார். இது தென்னாப்ரிக்கா அணிக்கு பின்னடைவாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. மேலும் அவர் 4 முதல் 6 வாரங்கள் வரையில் ஓய்வெடுப்பார் என கூறப்படுகிறது. எனவே, அவர் இந்தியாவுக்கு எதிரான மற்ற டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதில் சந்தேகம் எழுந்துள்ளது.
தோல்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த ஒரு ஆண்டாக ஸ்டெயின் விளையாடா முடியாமல் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. #SAvIND #Steyn #INDvSA