பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் நாளை மறுநாளும், 14-ந் தேதியும் 2 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது.
இந்த மாநிலத்தில் 22 ஆண்டுகளாக பாரதிய ஜனதா ஆட்சியில் உள்ளது. இடையில் பிரதமர் நரேந்திர மோடி 13 ஆண்டுகள் தொடர்ந்து மாநிலத்தில் முதல்-மந்திரியாக இருந்தார்.
அவர் முதல்-மந்திரியாக இருந்த வரை குஜராத்தில் பாரதிய ஜனதா அசைக்க முடியாத சக்தியாக இருந்தது. 2014-ல் மோடி பாரதிய ஜனதா பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு பாராளுமன்ற தேர்தல் நடந்த போது மாநிலத்தில் உள்ள 26 எம்.பி. தொகுதிகளையும் பாரதிய ஜனதா கைப்பற்றியது. சுமார் 60 சதவீத ஓட்டுகள் பாரதிய ஜனதாவுக்கு கிடைத்து இருந்தன.
அவர் பிரதமர் ஆனதற்கு பிறகு வந்த முதல்-மந்திரிகளால் பாரதிய ஜனதாவின் செல்வாக்கை தக்க வைக்க முடியவில்லை.
பாராளுமன்ற தேர்தலை சந்தித்து ஒரு வருடமே ஆகி இருந்த நிலையில் 2015-ல் குஜராத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. அப்போதே அங்கு பாரதிய ஜனதாவின் செல்வாக்கு சற்று சரிந்து இருந்தது.
மாநகராட்சி மற்றும் நகரசபைகளில் பாரதிய ஜனதா அதிக இடங்களை கைப்பற்றி இருந்தாலும் மாவட்ட பஞ்சாயத்து, தாலுகா பஞ்சாயத்து போன்றவற்றில் காங்கிரஸ் அதிக இடங்களை தன் வசப்படுத்தி இருந்தது.
இந்த தேர்தலுக்கு முன்னதாக அந்த மாநிலத்தின் பெரும்பான்மை இனங்களில் ஒன்றான பட்டேல் சமூகத்தினர் இடஒதுக்கீடு கேட்டு போராட்டம் நடத்தினார்கள்.
அந்த போராட்டம் பாரதிய ஜனதாவுக்கு எதிராக மாறி இருந்தது. இதன் காரணமாகத்தான் கிராம பகுதிகளில் அதிக ஓட்டுகள் கிடைத்ததாக கருதப்பட்டது.
உள்ளாட்சி தேர்தலில் மொத்தம் உள்ள 6 மாநகராட்சி பகுதிகளில் பாரதிய ஜனதாவுக்கு 50 சதவீத ஆதரவும், காங்கிரசுக்கு 41 சதவீத ஆதரவும் கிடைத்து இருந்தது.
மொத்தம் உள்ள 56 நகராட்சிகளில் பாரதிய ஜனதாவுக்கு 45 சதவீதம் பேரும், காங்கிரசுக்கு 40 சதவீதம் பேரும் ஓட்டு அளித்து இருந்தனர்.
அதே நேரத்தில் மாவட்ட பஞ்சாயத்து, தாலுகா பஞ்சாயத்தில் காங்கிரஸ் அதிக ஓட்டுகளை பெற்று இருந்தது. மாவட்ட பஞ்சாயத்துகளில் காங்கிரசுக்கு 48 சதவீதமும், பாரதிய ஜனதாவுக்கு 44 சதவீதமும் ஆதரவு கிடைத்து இருந்தன.
தாலுகா பஞ்சாயத்துகளில் காங்கிரஸ் 46 சதவீத ஆதரவையும், பாரதிய ஜனதா 42 சதவீத ஆதரவையும் பெற்று இருந்தன.
இப்போது சட்டசபை தேர்தலிலும் கிராம பகுதிகளில் காங்கிரசுக்கு அதிக செல்வாக்கு இருப்பதாக தெரிய வந்துள்ளது. சி.எஸ்.டி.எஸ். என்ற அமைப்பு நவம்பர் மாதத்தில் கருத்து கணிப்பு ஒன்றை நடத்தி உள்ளது. அதில் கிராம பகுதிகளில் பாரதிய ஜனதாவை விட காங்கிரசுக்கே மக்கள் மத்தியில் அதிக ஆதரவு இருப்பதாக தெரிய வந்துள்ளது.
குஜராத்தை பொறுத்த வரை 65 சதவீத வாக்காளர்கள் கிராம பகுதிகளில் உள்ளனர். எனவே, கிராம பகுதிகளில் காங்கிரசுக்கு அதிக செல்வாக்கு இருப்பதால் தேர்தல் முடிவுகள் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் என்ற நிலையை ஏற்படுத்தி உள்ளது.
2014-ல் பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா- காங்கிரசுக்கு கிராம பகுதிகளில் கிடைத்த ஓட்டுகளையும், இப்போது கருத்து கணிப்பில் கிராமங்களில் இரு கட்சிகளுக்கும் கிடைத்துள்ள ஆதரவையும் ஒப்பிட்டு புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளனர்.
இதன்படி தெற்கு குஜராத்தில் 2014 பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் 44 சதவீதம் ஓட்டுகளை பெற்று இருந்தது. இப்போதைய கருத்து கணிப்புபடி அங்கு 2 சதவீத ஓட்டுகள் குறைந்து 42 சதவீதத்தை காங்கிரஸ் பெறுகிறது. அதே நேரத்தில் பாரதிய ஜனதாவுக்கு அந்த பகுதியில் 2014-ல் 47 சதவீத ஓட்டுகள் கிடைத்தன. அது தற்போது 44 சதவீதமாக குறைகிறது.
மத்திய குஜராத்தில் 2014-ல் காங்கிரசுக்கு 37 சதவீத ஓட்டுகள் கிடைத்தன. அது, இப்போது 47 சதவீதமாக அதிகரிக்கிறது. அங்கு பாரதிய ஜனதாவுக்கு 2014-ல் 54 சதவீத ஆதரவு கிடைத்தது. அது தற்போது 43 சதவீதமாக குறைகிறது.
வடக்கு குஜராத்தில் 2014-ல் காங்கிரசுக்கு 38 சதவீத ஓட்டுகள் கிடைத்தன. அது இப்போது 56 சதவீதமாக அதிகரிக்கிறது. பாரதிய ஜனதாவுக்கு 2014-ல் 55 சதவீத ஆதரவு இருந்தது. அது தற்போது 41 ஆக வீழ்ச்சி அடைகிறது.
சவுராஷ்ரா பகுதியில் 2014-ல் காங்கிரஸ் 36 சதவீத ஆதரவை பெற்று இருந்தது. அது இப்போது மிக அதிகமாக 49 சதவீதத்தை எட்டுகிறது. அதே நேரத்தில் 2014-ல் பாரதிய ஜனதாவுக்கு இங்கு 53 சதவீதமாக இருந்தது. அது இப்போது 43 சதவீதமாக குறைகிறது.
2014 தேர்தலில் பாரதிய ஜனதாவுக்கு ஒட்டுமொத்த கிராம பகுதிகளிலும் சேர்த்து 54.76 சதவீத ஓட்டுகளும், காங்கிரசுக்கு 35.95 சதவீத ஓட்டுகளும் கிடைத்தன. இப்போதைய கருத்து கணிப்பில் அங்கு காங்கிரஸ் முந்துகிறது.
கிராம பகுதிகளில் காங்கிரசுக்கு செல்வாக்கு அதிகரித்து இருப்பதற்கு பட்டேல் சமூகத்தினரும், தலித் சமூகத்தினரும்தான் முக்கிய காரணம் என்று தெரிய வந்துள்ளது.
இந்த இரு சமூகத்தினரும் கிராம பகுதிகளில்தான் அதிகமாக வசிக்கிறார்கள். பட்டேல் சமூகத்தினர் இட ஒதுக்கீடு போராட்டம் நடத்திய போது, போலீஸ் அடக்குமுறைகளை கையாண்டது. இது அந்த மக்களிடம் அரசு மீது கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. அவர்கள் பாரதிய ஜனதாவுக்கு எதிராக மாறியதுடன் காங்கிரசுக்கு ஆதரவு கரம் நீட்டுகிறார்கள்.
அதேபோல் பசு இறைச்சி பிரச்சினையில் குஜராத் மாநிலம் யுனாவில் தலித் சமூக இளைஞர்கள் தாக்கப்பட்டனர். இந்த பிரச்சினையை கையில் எடுத்து ஜிக்னேஷ் மெவானி என்பவர் தலித் அஸ்மிதா யாத்ரா என்ற அமைப்பை தொடங்கி போராட்டம் நடத்தினார்.
இதன் மூலம் அந்த அமைப்புக்கு கிராமங்களில் தலித் சமூகத்தினர் மத்தியில் அதிக செல்வாக்கு ஏற்பட்டது. அவர் தற்போது காங்கிரஸ் அணியில் சேர்ந்துள்ளார். இதன் காரணமாக தலித் ஓட்டுகளும் காங்கிரசுக்கு கிடைக்கின்றன.
இவ்வாறு பட்டேல்- தலித் சமூகத்தினர் ஆதரவு காங்கிரசுக்கு இருப்பதால் கிராமங்களில் காங்கிரசின் செல்வாக்கு அதிகமாக இருக்கிறது.