இந்தியா முதல் இன்னிங்சில் 56 ரன்கள் முன்னிலைப் பெற்றது. பின்னர் வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 56 ரன்கள் பின்தங்கிய நிலையில், 2-வது இன்னிங்சை தொடங்கியது. முதல் ஓவரை உமேஷ் யாதவ் வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தில் பிராத்வைட் ரன்ஏதும் எடுக்காமல் டக்அவுட் ஆனார். மற்றொரு தொடக்க வீரரான பொவேல் ரன்ஏதும் எடுக்காமல் அஸ்வின் பந்தில் ஆட்டமிழந்தார். 6 ரன்கள் எடுப்பதற்குள் 2 விக்கெட்டுக்களை இழந்தது.
3-வது விக்கெட்டுக்கு ஷாய் ஹோப் உடன் ஹெட்மையர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி ஓரளவு தாக்குப்பிடித்து விளையாடியது. 28 ரன்கள் எடுத்த நிலையில் ஹோப் ஆட்டமிழந்தார். ஹெட்மையர் 17 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். 3-வது நாள் மதிய உணவு இடைவேளைக்கு சற்றுமுன் உமேஷ் யாதவ் ரோஸ்டன் சேஸ் (6), டவ்ரிச் (0) ஆகியோரை க்ளீன் போல்டாக்கி வெளியேற்றினார். இதனால் வெஸ்ட் இண்டீஸ் 70 ரன்கள் எடுப்பதற்குள் 6 விக்கெட்டுக்களை இழந்தது.
7-வது விக்கெட்டுக்கு அம்ப்ரிஸ் உடன் கேப்டன் ஹோல்டர் ஜோடி சேர்ந்தார். வெஸ்ட் இண்டீஸ் தேனீர் இடைவேளை வரை 6 விக்கெட் இழப்பிற்கு 76 ரன்கள் எடுத்திருந்தது. அம்ப்ரிஸ் 20 ரன்னுடனும், ஹோல்டர் 4 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
தேனீர் இடைவேளை முடிந்து மீண்டும் ஆட்டம் தொடங்கியது. இந்த ஜோடி இந்திய பந்து வீச்சாளர்களுக்கு சற்று நெருக்கடி கொடுத்தது. அந்த நேரத்தில்தான் ஹோல்டரை 19 ரன்னிலும், அம்பிரிஸை 38 ரன்னிலும் ஜடேஜா அடுத்தடுத்து வெளியேற்றினார். இந்த ஜோடி 30 ரன்கள் சேர்த்தது. இந்த ஜோடி பரிந்ததும் இந்தியா சற்று நிம்மதி அடைந்தது. அதன்பின் வந்த வாரிகனை (7) அஸ்வினும், கேப்ரியலை (1) உமேஷ் யாதவும் வெளியேற்ற வெஸ்ட் இண்டீஸ் 127 ரன்னில் சுருண்டது.