செய்திகள்

ரேணிகுண்டாவில் இருந்து பெங்களூரு, ஐதராபாத்துக்கு விமான சேவை

ரேணிகுண்டாவில் இருந்து பெங்களூரு, ஐதராபாத்துக்கு விமான சேவையை மத்திய மந்திரி அசோக் கஜபதிராஜு நேற்று தொடங்கி வைத்தார்.

மாலை மலர்

ரேணிகுண்டாவில் இருந்து பெங்களூரு, ஐதராபாத்துக்கு விமான சேவையை மத்திய மந்திரி அசோக் கஜபதிராஜு நேற்று தொடங்கி வைத்தார்.

மத்திய விமான போக்குவரத்துத்துறை மந்திரி அசோக் கஜபதிராஜு நேற்று முன்தினம் குடும்பத்தினருடன் ஏழுமலையானை தரிசிக்க திருமலைக்கு வந்தார். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று முன்தினம் மாலை நடந்த சகஸ்ர தீபலங்கார சேவையில் குடும்பத்தினருடன் பங்கேற்று சாமி தரிசனம் செய்தார். அப்போது உற்சவர் மலையப்பசாமி கோவிலில் நான்கு மாடவீதிகளில் உலா வந்தபோது, அதில் அவரும் குடும்பத்தினரும் வலம் வந்து சாமி தரிசனம் செய்தனர்.

அதைத்தொடர்ந்து மந்திரி அசோக் கஜபதிராஜு மற்றும் குடும்பத்தினர் திருமலையில் உள்ள ஸ்ரீகிருஷ்ணா விடுதியில் நேற்று முன்தினம் இரவு தங்கி ஓய்வெடுத்தனர். அதைத்தொடர்ந்து நேற்று காலை வி.ஐ.பி. தரிசனத்தில் சென்று மந்திரி அசோக் கஜபதிராஜு மற்றும் குடும்பத்தினர் சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் லட்டு, தீர்த்தப்பிரசாதம் ஆகியவை வழங்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து நேற்று ரேணிகுண்டா விமான நிலையத்தில் குறைந்த கட்டணத்தில் பெங்களூரு, ஐதராபாத் நகரங்களுக்கான விமான சேவை தொடக்க விழா நடந்தது. விழாவில் மந்திரி அசோக் கஜபதிராஜு கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி வைத்து மேற்கண்ட இரு நகரங்களுக்கும் விமான சேவையை தொடங்கி வைத்து பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

ரேணிகுண்டா விமான நிலையத்தில் இருந்து சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளுக்கு விமான போக்குவரத்து மேற்கொள்ளப்படுகிறது. கடந்த 3½ ஆண்டுகளாக பல்வேறு மாநிலங்களில் இருந்து பயணிகள் அதிக அளவில் விமான பயணம் செய்துள்ளனர். பல்வேறு மாநிலங்களில் உள்ள விமான நிலையம் அபிவிருத்தி செய்யப்படும். நாடு முழுவதும் விமான போக்குவரத்து மேம்படுத்தப்படும். நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்களில் இருந்தும் கூடுதல் விமானம் இயக்கப்படும்.

இந்தியாவில் டெல்லி, மும்பை, கொல்கத்தா ஆகிய நகரங்களில் இருந்து துபாய், சிங்கப்பூர் மற்றும் பல்வேறு நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன. ரேணிகுண்டா விமான நிலையம் தரம் உயர்த்தப்பட்டு 2015-ம் ஆண்டில் இருந்து சர்வதேச விமான நிலையமாக செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து பல்வேறு நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்காக சிறப்பு விமானங்கள் இயக்கப்படும். வியாபாரம், சுற்றுலா, தொழில் துறை தொடர்பான நடவடிக்கைகளுக்கு இனிமேல் பொதுமக்கள் குறைந்த கட்டணத்தில் விமானத்தில் பயணம் செய்யலாம்.

ஆந்திராவில் தற்போது செயல்படுத்தப்படும் ஜென்மபூமி மாவூரு திட்டம் நன்றாக உள்ளது. விமான சேவையில் மாநில அரசு, மத்திய அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். விமான அபிவிருத்தி திட்டத்துக்கு மத்திய அரசு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. கடந்த 6 மாதங்களுக்கு முன்பாக ரேணிகுண்டாவில் இருந்து கோவைக்கு தனியார் விமான சேவை தொடங்கப்பட்டு, விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இவ்வாறு மந்திரி அசோக் கஜபதிராஜு பேசினார்.

மேலும் அவர் கூறுகையில், ரேணிகுண்டாவில் இருந்து பெங்களூரு, ஐதராபாத் ஆகிய நகரங்களுக்கு இண்டிகோ விமான சேவை தொடங்கி வைக்கப்பட்டு உள்ளது. ரேணிகுண்டாவில் இருந்து ஐதராபாத்துக்கு தினமும் காலை 10.50 மணி, மாலை 5.20 மணி, இரவு 8.55 மணியளவில் 3 தடவை விமானம் இயக்கப்படும்.

அதேபோல், ஐதராபாத்தில் இருந்து ரேணிகுண்டாவுக்கு காலை 6.25 மணி, மதியம் 12.40 மணி, இரவு 7.10 மணிக்கு 3 தடவை விமானம் இயக்கப்படும். மேலும் திருப்பதியில் இருந்து பெங்களூருக்கு தினமும் காலை 8 மணி, மதியம் 2.45 மணியளவில் 2 தடவை விமானம் இயக்கப்படும்.

பெங்களூருவில் இருந்து ரேணிகுண்டாவுக்கு தினமும் 2 தடவை காலை 9.30 மணி, மாலை 3.30 மணியவில் 2 தடவை விமானம் இயக்கப்படும். விமான கட்டமாக ஐதராபாத்துக்கு ரூ.3 ஆயிரமும், பெங்களூருக்கு ரூ.1500-ம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது, என்றார்.