திருவள்ளூர்:
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகிலுள்ள பஞ்சட்டியில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா இன்று மாலை நடைபெற்றது. இதில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் உள்பட
அமைச்சர்கள் பலர் கலந்து கொண்டனர். விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது:
திருவள்ளூர் மாவட்டத்தின் வளர்ச்சிக்கு அ.தி.மு.க. ஆட்சியே காரணம். தொழிற்சாலைகள், ஏரிகள், கல்விக்கூடங்கள் நிறைந்த மாவட்டமாக திருவள்ளூர் திகழ்கிறது. ஒவ்வொரு ஊருக்கும் ஒரு ஏரி உள்ள மாவட்டம் திருவள்ளூர்.
திருவள்ளூர் தொழிற்சாலை மற்றும் கல்வி மாவட்டமாக திகழ காரணமானவர் ஜெயலலிதா. 27 ஆண்டுகள் ஆட்சியில் அமர்ந்திருக்கும் ஒரே கட்சி அ.தி.மு.க. தான். அ.தி.மு.க. ஆட்சியை கவிழ்க்க துடிக்கிறார்கள், அ.தி.மு.க. ஆட்சியை
எவராலும் தொட்டுப் பார்க்க முடியாது.
சாதாரண குடிமகனும் ஆட்சியில் அமர முடியும் என்பதற்கு வழிவகுத்தவர் ஜெயலலிதா. அதனால் தான், தன் வாரிசாக யாரையும் சுட்டிக்காட்டவில்லை. நாட்டு நலனுக்காக பாடுபட்ட தியாகிகளை எம்.ஜி.ஆர். மறந்ததில்லை.
தொழில்துறையில் தமிழகத்தை 3-வது மாநிலமாக உயர்த்தி காட்டியவர் ஜெயலலிதா. மக்களுக்கு எது தேவை உணர்ந்து செயல்படுகிறது தமிழக அரசு. நாட்டிலேயே முதலீட்டை ஈர்ப்பதில் சிறந்த மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. பல்வேறு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன. மேலும், முதலீட்டாளர்கள் விரும்பும் முன்னணி மாநிலமாக தமிழகம் உள்ளது.
உணவு தானிய உற்பத்தியில் சாதனை புரிந்ததால் விருது பெற்றது தமிழ்நாடு. விவசாயிகளுக்கு என பிரத்யேக திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
மாணவர் சேர்க்கையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணப்பட்டுள்ளது. இன்னும் 10 ஆண்டுகளில் விஞ்ஞானத்தில் சிறந்த மாநிலமாக மாறிவிடும். தமிழகத்தில் டெங்கு காய்ச்சலை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளோம். மின்சார
விநியோகம் தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த விழாவில் பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், இரட்டை இலையை மீட்டெடுப்போம். அதிமுக அணிகள் இணைப்பு சிலருக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. பலருக்கு புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது என தெரிவித்துள்ளார்.