செய்திகள்

அகஸ்தியர் மலை உலக உயிர்க்கோள் பகுதி: சான்றிதழை தமிழக அரசிடம் ஒப்படைத்தது யுனெஸ்கோ அமைப்பு

அகஸ்தியர் மலை உயிர்கோள் காப்பக பகுதியை உலக உயிர்கோள் காப்பக பகுதியின் பட்டியலில் பதிவு செய்யப்பட்ட சான்றிதழினை யுனெஸ்கோ அமைப்பு, தமிழக அரசிடம் ஒப்படைத்துள்ளது.

சென்னை:

பெரு நாட்டில் உள்ள லிமாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 18, 19-ம் தேதிகளில் நடைபெற்ற 28-வது உலக அளவிலான ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பினால் மனித - உயிர்கோள் காப்பக திட்டத்தின் கீழ் அகஸ்தியர் மலை, உலகளாவிய உயிர்கோள் காப்பகத்தின் ஒரு பகுதியாக தேர்வு செய்யப்பட்டது. உலக அளவில் மொத்தம் 20 இடங்கள் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

இந்நிலையில், அகஸ்தியர் மலை உயிர்கோள் காப்பக பகுதியை உலக உயிர்கோள் காப்பக பகுதி என பட்டியலில் பதிவு செய்யப்பட்ட சான்றிதழினை யுனெஸ்கோ அமைப்பு, தமிழக அரசுக்கு இன்று வழங்கியது. 

அகஸ்தியர் மலைக்கு யுனெஸ்கோ அமைப்பு உயிர்கோள் காப்பக பகுதிகள் சான்றிதழ் ஒப்படைக்கும் நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை முதன்மைச் செயலாளார் முகமது நசிமுதின், மத்திய அரசின் சுற்றுச் சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் கூடுதல் செயலர் அமிதா பிரசாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

3500.36 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுள்ள பகுதியினை அகஸ்தியர்மலை உயிர்கோள் காப்பகமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், 1672.36 சதுர கிலோ மீட்டர் தமிழ்நாட்டிலும், 1828 சதுர கிலோ மீட்டர் கேரளாவிலும் உள்ளது.