புதுடெல்லி:
‘லைம் லைட் நெட்வொர்க்ஸ்’ என்ற நிறுவனம், ஆன்லைன் வீடியோக்களின் நிலை என்ற பெயரில் ஆய்வு நடத்தியது. இதில் ஆன்லைன் வீடியோக்களில் சர்வதேச அளவில் இந்தியர்களே அதிக நேரம் செலவழிப்பது தெரியவந்துள்ளது.
இந்த ஆண்டுக்கான ஆய்வில், “இந்தியர்கள் சராசரியாக வாரத்துக்கு 8 மணி நேரம் 33 நிமிடங்கள் ஆன்லைன் வீடியோவுக்காக செலவழிப்பது” தெரியவந்துள்ளது. இது சர்வதேச அளவில் சராசரியான 6 மணி நேரம் 48 நிமிடங்கள் என்ற அளவைவிட 1 மணி நேரம் 45 நிமிடங்கள் அதிகம். இதன் மூலம் ஆன்லைனில் வீடியோ பார்ப்பதில் உலக மக்களின் சராசரியை இந்தியர்கள் முறியடித்து உள்ளனர்.
கடந்த ஆண்டு இந்தியர்கள் ஆன்லைன் வீடியோக்களுக்கு செலவழிக்கும் நேரம் 2 மணி நேரம் 25 நிமிடங்களாக இருந்தது.
ஆன்லைன் வீடியோக்கள் இலவசமாக வழங்கப்பட்டால் 84.8 சதவீதம் இந்தியர்கள் அதனை உடனே பார்க்கின்றனர். அதேபோல் ஆன்லைன் வீடியோக்களை இந்தியர்கள் வீட்டிலேயே அதிகமாக பார்க்கின்றனர். வீடு இல்லாவிட்டால் பயணத்தின்போது காண்பதாக, இந்த ஆய்வு அறிக்கை குறிப்பிட்டிருக்கிறது.