மிதாலிராஜ் 
செய்திகள்

முதல்முறையாக பகல்-இரவு டெஸ்டில் விளையாடுகிறது இந்திய பெண்கள் அணி

இந்தியா-இங்கிலாந்து மோதும் டெஸ்ட் போட்டி பிரிஸ்டலில் ஜூன் 16-ந்தேதி தொடங்குகிறது. 2014-ம் ஆண்டுக்கு பிறகு இந்திய பெண்கள் அணி ஆடும் முதல் டெஸ்ட் இதுவாகும்.

மாலை மலர்

மிதாலிராஜ் தலைமையிலான இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி ஜூன், ஜூலை மாதங்களில் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒரு டெஸ்ட், 3 ஒரு நாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. இந்தியா-இங்கிலாந்து மோதும் டெஸ்ட் போட்டி பிரிஸ்டலில் ஜூன் 16-ந்தேதி தொடங்குகிறது. 2014-ம் ஆண்டுக்கு பிறகு இந்திய பெண்கள் அணி ஆடும் முதல் டெஸ்ட் இதுவாகும். இதைத் தொடர்ந்து இந்திய பெண்கள் அணி ஆஸ்திரேலியாவுக்கு சென்று விளையாட இருக்கிறது. இதற்கான போட்டி அட்டவணையை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்தது.

ஆஸ்திரேலிய மண்ணில் 15 ஆண்டுகளுக்கு பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட உள்ள இந்திய பெண்கள் அணி, இதுவரை ஆஸ்திரேலியாவை டெஸ்டில் வீழ்த்தியதில்லை. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மொத்தம் 9 டெஸ்டில் ஆடியிருக்கும் இந்திய அணி அதில் 4-ல் தோல்வியும், 5-ல் டிராவும் கண்டுள்ளது.

இதையொட்டி இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜெய்ஷா தனது டுவிட்டர் பக்கத்தில், ‘இந்திய பெண்கள் கிரிக்கெட்டை நாங்கள் முன்னெடுத்து செல்கிறோம். இந்திய பெண்கள் அணி ஆண்டின் இறுதியில் ஆஸ்திரேலியாவில் முதல்முறையாக பிங்க் பந்து டெஸ்டில் விளையாட இருப்பதை மகிழ்ச்சியோடு அறிவிக்கிறோம்’ என்று கூறியுள்ளார்.