செய்திகள்

இந்திய பெண்களுக்கு கருப்பை புற்றுநோய் தாக்குதல் அதிகரித்துள்ளதாக அதிர்ச்சி தகவல்

இந்தியாவில் 16 வயது முதல் 30 வரையிலான பெண்களுக்கு அதிக அளவில் கருப்பை புற்றுநோய் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. #cancer

மாலை மலர்

சென்னை:

தற்போது அதிக அளவிலான பெண்கள் கருப்பை புற்று நோயினால் பாதிக்கப்படுகிறார்கள். இதற்கு இளம் பெண்களும் விதிவிலக்கல்ல. எனவே, அதை தடுக்கும் நடவடிக்கையில் இந்திய புற்றுநோய் கழகம் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

பொதுவாக கருப்பை புற்று நோய் ‘பாப்பிலோமா’ என்ற வைரஸ் மூலம் பரவுகிறது. ஆகவே இதுகுறித்த பரிசோதனை கடந்த 2013 முதல் 2017-ம்ஆண்டு வரை 3 ஆயிரம் பெண்களிடம் நடத்தப்பட்டது. 16 முதல் அனைத்து வயது பெண்கள் வரை இப்பரிசோதனை நடந்தது. நாட்டில் சென்னை உள்ளிட்ட பல நகரங்களில் நடந்த இப்பரிசோதனையில் பல அதிர்ச்சி தரும் தகவல்கள் கிடைத்தன.

அதன்படி 16 முதல் 30 வயது வரையிலான பெண்களுக்கு அதிக அளவில் கருப்பை புற்றுநோய் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. சென்னை உள்ளிட்ட மிகப்பெரிய 5 நகரங்களில் வாழும் பெண்கள் இந்நோய் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர்.

இவர்களில் 14 சதவீதம் பேர் நோயின் கடுமையான தாக்குதலுக்கு ஆளாகி உள்ளனர். அதே நேரத்தில் 61 முதல் 85 வயதுவரையிலான பெண்களில் 8.39 சதவீதம் பேர் இதே நிலையில் இருப்பதும் கண்டறியப்பட்டது.

பொதுவாக நாட்டில் தென் மண்டலத்தில் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் 9.78 சதவீதம் பேரும், மேற்கு மண்டலத்தில் 10.23 சதவீதம் பேரும் பாப்பில்லோமோ வைரஸ்’ சால் பாதிக்கப்பட்டுள்ளனர். சராசரியாக நாடு முழுவதும் 8.04 சதவீதம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக பரிசோதனையின் விவரங்கள் தெரிவிக்கிறது.

புகை பிடித்தல், அதிக அளவில் கருத்தடை சாதனங்கள் மற்றும் மாத்திரைகள் பயன்படுத்துதல், பல ஆண்களுடன் உறவு கொள்ளுதல், மிக குறைந்த வயதில் ‘செக்ஸ்’சில் ஈடுபடுதல் போன்றவற்றால் கருப்பை புற்றுநோய் ஏற்படுகிறது.

எனவே மேற்கண்ட நடவடிக்கைகளில் ஈடுபடாவிட்டால் கருப்பை புற்றுநோய் வராமல் தடுக்கலாம் என டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர். #cancer