நாக்பூர்:
மராட்டியத்தின் பார்தா மாவட்டத்தில் ஹிங்கன்காட் நகரை சேர்ந்தவர் அங்கீதா பிசுடே (24). கல்லூரி பேராசிரியையாக வேலை பார்த்து வந்தார்.
இவரும், அதே பகுதியை சேர்ந்த விகேஷ்சாக்ரேலே (27) என்ற வாலிபரும் நண்பர்களாக பழகி வந்தனர். ஆனால் விகேஷின் நடவடிக்கைகள் மாறியதால் அவருடனான நட்பை அங்கீதா துண்டித்து விட்டார்.
ஆனால் விகேஷ் ஒருதலையாக அங்கீதாவை காதலித்தார். அவரது காதலை அங்கீதா ஏற்க மறுத்தார். எனினும் விகேஷ் அங்கீதாவை பின்தொடர்ந்து சென்று துன்புறுத்தினார்.
கடந்த 3-ந் தேதி அங்கீதா வழக்கம் போல கல்லூரிக்கு சென்றார். பஸ்சில் இருந்து கீழே இறங்கி கல்லூரிக்கு நடந்து சென்றபோது அவரை பின்தொடர்ந்து வந்த விகேஷ் தான் கொண்டு வந்திருந்த பெட்ரோலை அங்கீதா மீது ஊற்றி தீ வைத்தார்.
இதில் அங்கீதா 40 சதவீத காயங்களுடன் மிகவும் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த 8 நாட்களாக உயிருக்கு போராடிக்கொண்டிருந்த அங்கீதா நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார்.
முகம் மற்றும் தலைப்பகுதிகளில் ஆழமான தீக்காயங்கள் ஏற்பட்டதாலும், உள்ளுறுப்புகளும் தீக்காயத்தால் பாதிக்கப்பட்டதாலும் அவர் மரணமடைந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
அங்கீதாவை எரித்த உடனே விகேசை போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்திருந்தனர். தற்போது இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது.
அங்கீதாவின் மறைவுக்கு முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே இரங்கல் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கு விரைவு நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் என்றும், அங்கீதாவின் குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும் மாநில உள்துறை மந்திரி அனில் தேஷ்முக் அறிவித்துள்ளார்.
அங்கீதா மரணமடைந்ததை அடுத்து நேற்று ஹிங்கன்வாட் பகுதியில் ‘பந்த்’ நடத்தப்பட்டது. அவரது உடல் பிரேதபரிசோதனை முடிந்து இறுதி சடங்குக்காக ஆம்புலன்சில் எடுத்து வரப்பட்டது.
அப்போது ஆவேசமடைந்த அப்பகுதியை சேர்ந்த சிலர் ஆம்புலன்ஸ் மீது கற்களை வீசினர். இதையடுத்து தடியடி நடத்தி போலீசார் கூட்டத்தை கலைத்தனர். அதன்பின்னர் இறுதிச்சடங்குகள் நடைபெற்றன.