நியூயார்க்:
அமெரிக்காவில் கடந்த 14 ஆண்டுகால வரலாறு காணாத பெரும் புயல் கடந்த வாரம் டெக்சாஸ் மாநிலத்தை தாக்கியது. மணிக்கு சுமார் 140 (சுமார் 210 கிலோ மீட்டர்) கிலோ மீட்டர் வேகத்தில் சீறிவந்த இந்த பெரும் புயல் அரன்சாஸ் மற்றும் ஓ’கோன்னோர் துறைமுகங்களுக்கு இடையே டெக்சாஸ் மாநிலத்தின் தென்பகுதியை பதம் பார்த்தது.
புயலின் எதிரொலியாக பெய்த பெருமழையால் மாநிலத்தின் பல பகுதிகள் வெள்ளக்காடாக மாறின. இந்நிலையில், வெள்ளப் பெருக்கின்போது இங்குள்ள பிரியான் ஏரியில் குளிக்கச் சென்ற இரு இந்திய மாணவர்கள் வெள்ளத்தில் சிக்கி உயிருக்கு போராடினர். அவர்கள் இருவரையும் மீட்புப் படையினர் காப்பாற்றி ஆஸ்பத்திரியில் அனுமதித்திருந்தனர்.
இந்த மாணவர்கள் இருவரும் மருத்துவ மேல் படிப்புக்காக அமெரிக்கா சென்றிருந்த நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவந்த இந்திய மாணவரான நிகில் பாட்டியா சிகிச்சை பலனின்றி கடந்த மாதம் 30-ம் தேதி உயிரிழந்தார்.
ஹார்வே புயலின் கோரத் தாண்டவததால் சுமார் 13 லட்சம் பாதிக்கப்பட்டுள்ளனர். டெக்சாஸ் மாநிலத்தின் பல பகுதிகளில் இன்னும் வெள்ளநீர் வடியாமல் உள்ளது. நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. டெக்சாஸ் மாநிலத்தில் மட்டும் சுமார் ஒன்றரை லட்சம் இந்திய அமெரிக்கர்கள் வாழ்ந்துவரும் நிலையில் புயல் மற்றும் மழைசார்ந்த விபத்துகளில் சுமார் 50 பேர் பலியானதாக தெரியவந்துள்ளது.
இந்நிலையில், பிரியான் ஏரியில் குளிக்கச் சென்றபோது வெள்ளத்தில் சிக்கி மீட்கப்பட்டு, சிகிச்சை பெற்றுவந்த இந்திய மாணவி ஷாலினி சிங்(25) சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்தார்.
டெல்லியை சேர்ந்த ஷாலினி சிங், இந்தியாவில் பல் மருத்துவம் பயின்றுவிட்டு கடந்த ஆகஸ்ட் மாதம்தான் அமெரிக்காவுக்கு வந்தார். இரண்டாண்டுகால மேல்படிப்புக்காக டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள பிரபல பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படித்துவந்தபோது ஹார்வே வடிவில் வந்த எமன் ஷாலினி சிங்கின் உயிரை பறித்து விட்டது குறிப்பிடத்தக்கது.
அவரது உடல் தகனம் பிரயான் பகுதியில் நடைபெறும் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.