டெல்லி:
தகவல் தொழில்நுட்ப புரட்சியின் அடுத்த பரிமணானமான 5ஜி தொழில்நுட்பம் வரும் 2020-ல் உபயோகத்திற்கு வர உள்ளது. இதில் இந்தியாவும் இணைவது குறித்து மத்திய அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது. இது பற்றி அரசுக்கு ஆலோசனை வழங்க உயர்மட்ட நிபுணர் குழு ஒன்றை அரசு அமைத்துள்ளதாக தொலை தொடர்புத்துறை மந்திரி மனோஜ் சிம்ஹா தெரிவித்திருந்தார். 5ஜி தொழில்நுட்பத்தை வெற்றிகரமாக அமல்படுத்துவது பற்றி ஆராய்ந்து இந்த குழு அரசுக்கு அறிக்கை அளிக்கும்.
தொலை தொடர்பு, மின்னணுவியல் மற்றும் அறிவியல் தொழில்நுட்ப அமைச்சக செயலர்கள் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர். 5ஜி அலைவரிசை பயன்பாடு, அது குறித்த ஆய்வு மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டிற்காக மத்திய அரசு ரூ.500 கோடி ஒதுக்கியுள்ளது. 5ஜி தொழில்நுட்பத்தில் நகர்புறங்களுக்கு வினாடிக்கு 10,000 மெகா பைட் வேகத்தில் இணையதள இணைப்பு வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. கிராமப்புறங்களில் வினாடிக்கு 1000 மெகா பைட் வேகத்தில் இந்த இணைப்பு இருக்கும் என கூறப்படுகிறது.