உலகின் மிக உயரமான சிகரமான எவரெஸ்ட் சிகரம் இமயமலையில் உள்ளது. நேபாள நாட்டில் உள்ள இந்த சிகரத்தில் ஏறுவதற்கு உலகம் முழுவதும் உள்ள மலையேற்ற வீரர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்காக ஆண்டுதோறும் மலையேற்ற சீசனில் கயிறு, ஆக்சிஜன் சிலிண்டர்கள் போன்ற உபகரணங்களின் உதவியுடன் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுகின்றனர். அவர்களுக்கு ஷெர்பாக்கள் வழிகாட்டுகின்றனர்.
அவ்வகையில் இந்த ஆண்டிற்கான மலையேற்ற சீசனில் இந்திய ராணுவ வீரர்கள் ஒரு குழுவாகச் சென்றனர். அவர்களில் குஞ்சாக் டெண்டா, கெல்ஷாபங் டோர்ஜீ பூட்டியா, கல்டென் பஞ்சூர், சோனம் பன்ட்சோக் ஆகிய 4 பேர் ஆக்சிஜன் சிலிண்டர்கள் உதவியின்றி எவரெஸ்ட் சிகரத்தை அடைந்தனர். இதன்மூலம் ஆக்சிஜன் சிலிண்டர் உதவியின்றி எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் அணி என்ற சாதனையை இந்த வீரர்கள் படைத்துள்ளனர்.
இதுதவிர உர்கியன் டோப்ஜியே, நவாங் கெலக் மற்றும் கர்மா ஜோபா ஆகிய வீரர்கள் ஆக்சிஜன் சிலிண்டர்கள் உதவியுடன் சிகரத்தை அடைந்துள்ளனர்.