புதுடெல்லி:
டோக்லாம் எல்லையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்தியா மற்றும் சீனா படைகள் வாபஸ் பெறப்பட்டுள்ளது என வெளியுறவு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சிக்கிம் எல்லையில் இந்தியா, சீனா, பூடான் நாடுகளின் முச்சந்திப்பில் டோக்லாம் எனும் பகுதி உள்ளது. கடந்த ஜூன் மாதம் டோக்லாம் பகுதியில் சீன ராணுவம் சாலை அமைக்கும் நடவடிக்கையில் இறங்கியது. இதை இந்திய ராணுவம் தடுத்தது.
இதனால் ஏற்பட்ட மோதல் காரணமாக இந்தியாவும், சீனாவும் அங்கு படைகளை குவித்தன. சுமார் 3,000-க்கு மேற்பட்ட வீரர்களை எல்லைக்கு அனுப்பி வைத்தன. இதனால் அங்கு பெரும் போர் பதற்றம் நிலவி வந்தது.
இதைத்தொடர்ந்து மத்திய வெளியுறவு துறை அமைச்சகம் டோக்லாம் பகுதியில் ஏற்பட்டுள்ள பிரச்சனை குறித்து தூதரக ரீதியாக சீனாவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தது.
இந்நிலையில், சர்ச்சைக்குரிய டோக்லாம் எல்லை பகுதியில் இருந்து இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளும் படைகளை திரும்ப பெற்றுள்ளன என்று இந்திய வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ரவீஷ்குமார் கூறுகையில், எல்லையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படைகளை இந்தியாவும் சீனாவும் வாபஸ் பெற்றுள்ளன. இருநாட்டு அதிகாரிகளும் இதை உறுதி செய்துள்ளனர் என தெரிவித்துள்ளார்.
சீனாவின் ஜியாமென் நகரில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா நாடுகளின் அமைப்பான ‘பிரிக்ஸ்‘ சார்பில் மாநாடு வரும் 3-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இதில் பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜின்பிங்கும் கலந்து கொள்கின்றனர்.
பிரிக்ஸ் மாநாட்டுக்கு முன்னரே டோக்லாம் பிரச்சனைக்கு தீர்வு காண இரு நாடுகளும் விரும்பியதால் இந்த உடன்பாடு எட்டப்பட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
டோக்லாம் எல்லையில் இந்தியாவும், சீனாவும் படைகளை வாபஸ் பெற்றுள்ளதால் கடந்த 3 மாதங்களாக நீடித்து வந்த போர் பதற்றம் முடிவுக்கு வந்துள்ளது.