செய்திகள்

இன்று உலக மக்கள் தொகை தினம்: 7 ஆண்டுகளில் இந்தியா முதலிடம் பிடிக்கும் - ஐ.நா. சபை

உலக மக்கள் தொகை நாளான இன்று ஐ.நா. சபை வெளியிட்டுள்ள தகவலில், இன்னும் 7 ஆண்டுகளில் மக்கள் தொகையில் இந்தியா முதலிடம் பிடிக்கும் என்று தெரிவித்துள்ளது.

சிக்கிம் நிலைமை சிக்கலாகி வருவதால் சீனாவுடன் மோதி பார்க்கவும் தயாராகி விட்டோம். அதன் முடிவை இப்போது கணிக்க முடியாது. ஆனால் மக்கள் தொகையில் இன்னும் ஏழு ஆண்டுகளில் சீனாவை முந்தி விடுவோம் என்று ஐ.நா. சபை கணித்துள்ளது.

(சீனாவின் தற்போதைய மக்கள் தொகை 139 கோடி என்பது குறிப்பிடத்தக்கது)

உலக மக்கள் தொகை 760 கோடியை தாண்டி சென்று கொண்டிருக்கிறது. மக்கள் தொகையை கட்டுப்படுத்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் ஜூலை 11-ந்தேதி உலக மக்கள் தொகை தினம் கடை பிடிக்கப்படுகிறது.

மக்கள் தொகை பெருக்கத்தால் உணவு தட்டுப்பாடு, சுற்றுச்சூழல் மாசுபடுதல், சுகாதார பிரச்சினை, வேலையில்லா திண்டாட்டம், போக்குவரத்து நெரிசல், பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட பலவிதமான பிரச்சினைகளை உலக நாடுகள் சந்திக்கின்றன. எனவே மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த நாளை ஒரு முக்கிய தினமாக கடை பிடிக்கிறார்கள்.

உலகம் முழுவதும் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இந்தியாவில் கடந்த 2011-ம் ஆண்டு கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அப்போதைய விவரப்படி இந்தியாவின் மக்கள் தொகை 121 கோடி, தற்போதைய மக்கள் தொகை 129 கோடியாக உயர்ந்திருப்பதாக தெரிய வந்துள்ளது.

பாலின வாரியாக ஆயிரம் ஆண்களுக்கு 940 பெண்கள் என்ற அளவில் மக்கள் தொகை விகிதம் உள்ளது.

அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமாக உத்தர பிரதேசமும், மிக குறைந்த மக்கள் தொகை கொண்ட மாநிலமாக சிக்கிமும் உள்ளது.

எழுத்தறிவு பெற்ற மாநிலத்தில் கேரளா முதலிடத்தை பெற்றுள்ளது. (93.91 சத வீதம்) மருத்துவ வளர்ச்சி, தொழில் வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இறப்பு சதவீதத்தை பிறப்பு சதவீதம் மிஞ்சி விட்டது.

அந்த காலத்தை போல் இன்று ஒன்பது பத்து பிள்ளைகள் பெற்றுக் கொள்ளும் நிலை இல்லை. நாமிருவர் நமக்கிருவர் என்ற நிலை மாறி நாமிருவர் நமக்கொருவர் என்ற நிலை உருவாகி உள்ளது.