இந்தியாவுக்கு வந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. கொல்கத்தாவில் நடந்த முதலாவது டெஸ்ட் மழை பாதிப்பால் ‘டிரா’ ஆனது. நாக்பூரில் நடந்த 2-வது டெஸ்டில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 239 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் இந்தியா - இலங்கை அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி டெல்லி பெரோஸ்ஷா கோட்லா மைதானத்தில் இன்று (சனிக்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி இரு அணி வீரர்களும் நேற்று பயிற்சி மேற்கொண்டனர்.
‘நம்பர் ஒன்’ அணியான இந்தியா இந்த டெஸ்டிலும் இலங்கையை புரட்டியெடுக்கும் வேட்கையுடன் இருக்கிறது. இந்த டெஸ்டில் டிராவோ அல்லது வெற்றி பெற்றாலோ தொடர் இந்தியாவின் வசமாகி விடும். அத்துடன் தொடர்ச்சியாக 9 டெஸ்ட் தொடர்களை கைப்பற்றியிருக்கும் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளின் உலக சாதனையை சமன் செய்து விடலாம். இது தான் இந்தியாவின் பிரதான குறியாகும்.
இப்போது இந்தியாவுக்கு, மூன்று தொடக்க ஆட்டக்காரர்களில் யாரை களம் இறக்குவது என்பது தான் பெருத்த தலைவலியாக அமைந்துள்ளது. முதலாவது டெஸ்டின் 2-வது இன்னிங்சில் தொடக்க ஆட்டக்காரர்கள் ஷிகர் தவான் 94 ரன்களும், லோகேஷ் ராகுல் 79 ரன்களும் விளாசினர்.
பிறகு சொந்தவேலை காரணமாக 2-வது டெஸ்டில் மட்டும் தவான் விலகினார். அவருக்கு பதிலாக 2-வது டெஸ்டில் விளையாடிய மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் தமிழகத்தை சேர்ந்த முரளிவிஜய் (128 ரன்) சதம் அடித்தார். விஜய், தவான், ராகுல் ஆகிய மூன்று பேரும் பார்மில் உள்ள நிலையில் யாரை கழற்றி விடுவது என்ற தர்மசங்கடத்தில் இந்திய அணி நிர்வாகம் ஆழ்ந்துள்ளது. மற்றபடி வெற்றியுடன் டெஸ்ட் தொடரை நிறைவு செய்வதில் நமது அணி வீரர்கள் வரிந்து கட்டி நிற்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.
முந்தைய டெஸ்டில் படுதோல்வி அடைந்த இலங்கை அணி, அதற்கு பரிகாரம் தேடுவதற்கு முயற்சிக்கும். ஆனால் அந்த அணி வீரர்கள் ஆடி வரும் விதத்தை பார்த்தால் இந்தியாவிடம் முழுவீச்சில் தாக்குப்பிடிப்பார்களா? என்பது சந்தேகம் தான். இந்த தொடரில் இந்திய தரப்பில் ஒரு இரட்டை சதம், 4 சதங்கள் அடிக்கப்பட்டுள்ளன. ஆனால் இலங்கை பேட்ஸ்மேன்களில் ஒருவர் கூட மூன்று இலக்கை தொடவில்லை.
டெல்லி டெஸ்டுக்கு சில மாற்றங்களை செய்ய இலங்கை அணி முடிவெடுத்துள்ளது. ரன் எடுக்க தடுமாறும் துணை கேப்டன் திரிமன்னே நீக்கப்படுகிறார். இதே போல் காயத்தால் விலகிய ஹெராத்துக்கு பதிலாக லக்ஷன் சன்டகன் சேர்க்கப்பட வாய்ப்புள்ளது. முன்னாள் கேப்டன் மேத்யூசும் ரன் குவிக்க வேண்டிய நெருக்கடியில் தவிக்கிறார். சில மாற்றங்களுடன் புதிய வியூகங்கள் வகுத்து களம் காணும் இலங்கை அணி சவால் அளிக்குமா அல்லது சரிந்து போகுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
இந்தியா: முரளிவிஜய், லோகேஷ் ராகுல் அல்லது தவான், புஜாரா, விராட் கோலி (கேப்டன்), ரஹானே, ரோகித் சர்மா, விருத்திமான் சஹா, அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, இஷாந்த் ஷர்மா அல்லது முகமது ஷமி, உமேஷ் யாதவ்.
இலங்கை: சமரவிக்ரமா, கருணாரத்னே, தனஞ்ஜெயா டி சில்வா, சன்டிமால் (கேப்டன்), மேத்யூஸ், நிரோஷன் டிக்வெல்லா, சுரங்கா லக்மல், தில்ருவான் பெரேரா, லாஹிரு காமகே, லக்ஷன் சன்டகன், விஷ்வா பெர்னாண்டோ அல்லது ரோஷன் சில்வா.