செய்திகள்

ஷான் மார்ஷை வீழ்த்த ‘ஸ்லோ யார்க்கர்’ வீச ரோகித் சர்மாதான் ஐடியா கொடுத்தார்: பும்ரா

மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் ஷான் மார்ஷை ‘ஸ்லோ யார்க்கர்’ பந்தால் வீழ்த்த ரோகித் சர்மாதான் ஐடியா கொடுத்தார் என பும்ரா தெரிவித்துள்ளார். #AUSvIND

மாலை மலர்

4-வது விக்கெட்டுக்கு ஷான் மார்ஷ் உடன் டிராவிஸ் ஹெட் ஜோடி சேர்ந்தார். இருவரும் தாக்குப்பிடித்து விளையாடினார்கள். இதனால் உணவு இடைவேளை நெருங்கிய நிலையில் ஆஸ்திரேலியா மேலும் விக்கெட் இழக்கவில்லை. உணவு இடைவேளைக்கான கடைசி ஓவரை பும்ரா வீசினார். இந்த ஓவரின் முதல் ஐந்து பந்திலும் விக்கெட் ஏதம் விழவில்லை.

கடைசி பந்தை ஷான் மார்ஷ் எதிர்கொண்டார். யாரும் எதிர்பாராத வகையில் பும்ரா அந்த பந்தை ஸ்லோ யார்க்கராக வீசினார். இதை சற்றும் எதிர்பார்க்காத ஷான் மார்ஷ் பந்தை தடுக்க முயன்றார். ஆனால் பந்து பேடில் பட்டதால் சந்தேகமின்றி எல்பிடபிள்யூ ஆனார்.

அதன்பின் பும்ரா அபாரமாக பந்து வீசி 15.5 ஓவரில் 33 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுக்கள் சாய்த்தார். இன்றைய 3-வதுநாள் ஆட்டம் முடிந்தபின், பும்ரா நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது ஷான் மார்ஷ் ஆட்டமிழந்தது குறித்து பும்ரா கூறுகையில் ‘‘நான் உணவு இடைவேளைக்கான கடைசி ஓவரை வீசும்போது ஆடுகளம் பெரிய அளவில் பந்து வீச்சுக்கு ஒத்துழைக்கவில்லை. பந்தும் சாப்ட்-ஆக இருந்தது.

மிட்-ஆஃப் திசையில் பீல்டிங் செய்து கொண்டிருந்த ரோகித் சர்மா என்னிடம், ‘‘இது கடைசி பந்து. நீங்கள் ‘ஸ்லோ’வாக வீச முயற்சி செய்யுங்கள்’’ என்றார். ஒருநாள் போட்டியில் நான் அதிக அளவில் பயன்படுத்தும் யுக்தியை அவர் கூறியதால், நான் அதை முயற்சி செய்ய முடிவு செய்தேன். திட்டத்தை சரியாக வெளிப்படுத்தியதால், கடைசி பந்தில் விக்கெட் வீழ்த்தினோம்.