மகளிருக்கான உலக இளைஞர் குத்துச்சண்டை போட்டிகள் அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டிகளில் 38 நாடுகளைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்ட வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இந்த போட்டியின் அரையிறுதி சுற்று போட்டிகளுக்கு ஏழு இந்திய வீராங்கனைகள் முன்னேறி பதக்கத்தை உறுதி செய்தனர். இந்நிலையில் நேற்று இறுதி சுற்று போட்டிகள் நடைபெற்றன.
48 கிலோ எடைப்பிரிவின் இறுதி போட்டியில் இந்தியாவின் நீத்து, கஜகஸ்தானின் உரக்பயெவா ஸாரியாவை 5-0 என்ற புள்ளிகளில் வீழ்த்தினார். இதேபோல் 54 கிலோ எடைப்பிரிவில் சாக்ஷி சவுத்ரி, இங்கிலாந்தின் ஸ்மித் ஐவி-ஜேனை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை தட்டிச்சென்றார்.
64 கிலோ எடைப்பிரிவின் இறுதி போட்டியில், சர்வதேச இளைஞர் சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்தியாவின் அன்குஷிதா போரோ, ரஷ்யாவின் தைனிக் எகடெரினாவை வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றார்.
இதேபோல் 57 கிலோ எடைப்பிரிவில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் ஷாஷி சோப்ரா, வியட்நாமின் டோ ஹாங் நிகாக்கை 4-1 என வீழ்த்தி தங்கப்பதக்கத்தை தட்டிச்சென்றார்.
51 கிலோ எடைப்பிரிவின் இறுதி போட்டியில் ஜோதி குலியா, ரஷ்யாவின் மோல்சனோவா எகடெரினாவை 5-0 என வீழ்த்தி தங்கப்பதக்கத்தை வென்றார்.