இந்தியா - மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டி-20 போட்டியில் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் அதிரடி ஆட்டத்தால் 190 ரன்களை இந்தியா குவித்தது.
கிங்ஸ்டன் நகரில் இந்தியா - மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதிய டி-20 போட்டி இன்று நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய கேப்டன் விராட் கோலி மற்றும் தவான் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.
தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய இந்த ஜோடி மேற்கிந்திய தீவுகள் அணியின் பவுலர்களை பதம் பார்த்தனர். 22 பந்துகளில் 39 ரன்களை குவித்த கோலி 6-வது ஓவரில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து 12 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட தவான் நான்கு பவுண்டரிகளை விளாசி 23 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆனார்.
பின்னர், களமிறங்கிய ரிஷு பாந்த் மற்றும் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் இருவரும் மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தனர். 5 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்சர்களுடன் தினேஷ் 29 பந்துகளில் 48 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தோனி 2 ரன்களில் வெளியேறி ரசிகர்களை ஏமாற்றினார்.
20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு இந்திய அணி 190 ரன்களை குவித்தது. மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்து வீச்சாளர்களில் டெய்லர் மற்றும் வில்லியம்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.