செய்திகள்

இந்தியாவுக்கு ‘ஹாட்ரிக்’ வெற்றி: ரோகித்சர்மா, டோனிக்கு வீராட்கோலி பாராட்டு

நேற்று நடந்த இலங்கைக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இதற்கு காரணமாக இருந்த ரோகித்சர்மாவுக்கும், டோனிக்கும் வீராட்கோலி பாராட்டு தெரிவித்துள்ளார்.

மாலை மலர்

பல்லேகலே:

இலங்கை அணிக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

பல்லேகலேவில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய இலங்கை அணியால் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 217 ரன்னே எடுக்க முடிந்தது.

திரிமானே அதிகபட்சமாக 105 பந்தில் 80 ரன்னும் (5 பவுண்டரி, 1 சிக்சர்), சண்டிமால் 36 ரன்னும் எடுத்தனர். பும்ரா 27 ரன் கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தினார். ஹர்த்திக் பாண்ட்யா, யசுவேந்தர சஹால், அக்‌ஷர் பட்டேல் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

பின்னர் விளையாடிய இந்தியா 45.1 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 218 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடக்க வீரர் ரோகித்சர்மா சதம் அடித்தார். 161-வது போட்டியில் விளையாடிய அவருக்கு இது 12-வது சதமாகும். ரோகித் சர்மா 145 பந்தில் 124 ரன்னும் ‘16 பவுண்டரி, 2 சிக்சர்) டோனி 86 பந்தில் 67 ரன்னும் (4 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர்.

இந்திய அணி ஒரு கட்டத்தில் 61 ரன்னுக்கு 4 விக்கெட்டை இழந்து இருந்தது. 5-வது விக்கெட்டான ரோகித்சர்மா- டோனி ஜோடி சிறப்பாக ஆடி அணியை வெற்றி பெற வைத்தனர். இருவரும் இணைந்து 157 ரன் எடுத்தனர்.

இந்தியா பெற்ற ‘ஹாட்ரிக்’ வெற்றியாகும். இதன்மூலம் 5 போட்டி கொண்ட ஒருநாள் தொடரை இந்தியா 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. முதல் ஆட்டத்தில் 9 விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்று இருந்தது.

இந்த வெற்றி குறித்து இந்திய அணி கேப்டன் வீராட்கோலி கூறியதாவது:-

சிறிய இலக்கு எப்போதுமே தந்திரமானதுதான். இதில் 2 அல்லது 3 முறை தோல்வி தழுவிய சம்பவம் நடந்து இருக்கலாம். ஆனால் அதை பெரிதாக நினைக்கவில்லை.

ரோகித்சர்மாவும், டோனியும் சிறப்பாக விளையாடி வெற்றியை பெற்றுக் கொடுத்தனர். இந்த ஆடுகளத்தில் பேட்டிங் செய்வது சவாலாக இருந்தது. பொறுப்புடன் விளையாடியது பாராட்டத்தக்கது.

பும்ராவின் பந்து வீச்சு மிகவும் அபாரமாக இருந்தது. 3 ஆட்டத்தில் அவர் 11 விக்கெட் கைப்பற்றி உள்ளார். அவரது பணி சிறப்பாக இருந்தது. அவர் தொடர்ந்து சிறப்பாக வீச வாழ்த்துகிறேன்.

தொடரை வென்றது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அணியில் 15 வீரர்கள் உள்ளனர். எஞ்சிய 2 ஆட்டங்களில் வீரர்கள் தேர்வில் மாற்றம் இருக்கும். தொடரை வென்று விட்டதால் விளையாடாத வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இரு அணிகள் மோதும் 4-வது ஒருநாள் போட்டி வருகிற 31-ந்தேதி (வியாழக்கிழமை) நடக்கிறது.