புதுடெல்லி:
சிக்கிம் மாநிலத்தில் இந்தியா-பூடான்-சீனா எல்லைகள் சந்திக்கும் இடமான டோகாலாம் பகுதியில் இந்திய ராணுவம் அமைத்த இரண்டு பதுங்கு குழிகளை சீன ராணுவத்தினர், கடந்த மாதம் 1 ஆம் தேதி அழித்தனர். அத்துடன், அத்துமீறி சாலை அமைத்து வருகிறது. இதனை தடுக்கும் விதமாக அந்த பகுதியில் இந்திய ராணுவத்தினர் கூடுதலாக குவிக்கப்பட்டனர். எனவே, அப்பகுதியில் போர்ப் பதற்றம் நிலவி வருகிறது.
டோகாலாம் பகுதியில் இருந்து இந்திய படைகளை திரும்பப் பெறுமாறு சீன ராணுவம் கூறியதை, இந்திய ராணுவம் ஏற்கவில்லை. இதனால் சீனா ஆத்திரம் அடைந்தது.
இதுபோல் கடந்த ஒரு மாத காலமாக இந்தியா-சீன ராணுவத்தினர் இடையே சிக்கிம் மாநில பகுதியில் மோதல் போக்கு நீடித்து வருகிறது.
இந்நிலையில், சீன எல்லையை ஒட்டியுள்ள சிக்கிம் மற்றும் அருணாச்சல பிரதேசத்தின் எல்லை பகுதிகளில் இந்தியா தனது படைவீரர்களின் எண்ணிக்கையை அதிகரித்து வருகிறது.
‘சீன எல்லையை ஒட்டியுள்ள சிக்கிம் மற்றும் அருணாசல பிரதேசத்தின் எல்லை பகுதிகளில் அதிகளவில் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு வருகின்றனர். கிழக்கு பகுதியில் முகாமிட்டுள்ள வீரர்கள் அனைவரும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது’ என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.