ஆஸ்திரேலியா - இந்தியா இடையில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. அடிலெய்டு மற்றும் மெல்போர்ன் டெஸ்டில் இந்தியா வெற்றி பெற்றது. பெர்த் டெஸ்டில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் சிட்னியில் நடைபெற்று வருகிறது.
புஜாரா, மயாங்க் அகர்வால் ஆகியோரின் பொறுப்பான ஆட்டத்தினால் முதல் நாள் ஆட்ட முடிவில் இந்தியா 4 விக்கெட் இழப்பிற்கு 303 ரன்கள் சேர்த்திருந்தது. மயாங்க் அகர்வால் 77 ரன்கள் சேர்த்தார். புஜாரா 130 ரன்களுடனும், விகாரி 39 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இன்று இரண்டாம் நாள் ஆட்டம் நடைபெற்றது. தொடர்ந்து ஆடிய புஜாரா சிறிது நேரத்தில் 150 ரன்களைக் கடந்தார். உணவு இடைவேளையின்போது இந்திய அணியின் ஸ்கோர் 5 விக்கெட் இழப்பிற்கு 389 ரன்கள் எடுத்திருந்தது. சிட்னி அரங்கை அதிரவைத்த புஜாரா 181 ரன்களுடன் இரட்டை சதத்தை நோக்கி பயணித்தார்.
உற்சாகத்துடன் பந்துகளை பறக்க விட்ட புஜாரா, இன்று தனது நான்காவது இரட்டை சதத்தை பதிவு செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக அவர் 193 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இந்நிலையில் ஜடேஜா 81 ரன்களில் அவுட் ஆனார். இதையடுத்து முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்வதாக கேப்டன் கோலி அறிவித்தார். அப்போது இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 622 ரன்கள் குவித்திருந்தது. ரிஷப் பந்த் 159 ரன்களுடன் களத்தில் இருந்தார். ஆஸ்திரேலியா தரப்பில் லயன் 4 விக்கெட்டுகளும், ஹேசில்வுட் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.