செய்திகள்

வடகொரியாவின் அணு ஆயுத சோதனைக்கு இந்தியா கண்டனம்

வடகொரியா இன்று மீண்டும் நடத்தி உள்ள அணு ஆயுத சோதனைக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.

மாலை மலர்

புதுடெல்லி:

சர்வதேச நாடுகளின் எதிர்ப்பு மற்றும் ஐ.நா. விதித்துள்ள பொருளாதார தடைகளையும் மீறி வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத சோதனைகளையும், ஏவுகணை சோதனைகளையும் நடத்தி வருகிறது. இதன் காரணமாக கொரிய தீபகற்பத்தில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.

ஏற்கனவே 5 முறை அணு ஆயுத சோதனை நடத்தியுள்ள வடகொரியா, 6-வது முறையாக அணுகுண்டு சோதனை நடத்தி உலக அரங்கை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. வடகொரியா நாட்டின் கிழக்கு மற்றும் வடகிழக்கு பகுதிக்கு இடையில் உள்ள சுங்ஜிபேகாம் பகுதியில் இன்று சக்திவாய்ந்த அணு குண்டினை வடகொரியா பரிசோதித்ததாகவும் இதன் விளைவாக 6.3 ரிக்டர் அளவிலான நில அதிர்வு ஏற்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

வடகொரியாவின் இந்த செயலுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:

சர்வதேச கடமைகளை வடகொரியா மீண்டும் மீறியிருப்பது கவலை அளிக்கிறது. வடகொரியாவின் இந்த நடவடிக்கையானது கொரிய தீபகற்பத்தில் அணுஆயுத அழிப்பு குறிக்கோளுக்கு எதிரானது. கொரிய பிராந்தியத்திலும், அதற்கு அப்பாலும் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை பாதிக்கும் இதுபோன்ற நடவடிக்கைகளை வடகொரியா கைவிட வேண்டும்.

அணுசக்தி மற்றும் ஏவுகணை தொழில்நுட்பங்கள் பெருக்கம் குறித்து இந்தியா கவலை கொண்டுள்ளது. அது இந்தியாவின் தேசிய பாதுகாப்பில் மோசமான பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதேபோல் வடகொரியாவின் இந்த ஆயுத சோதனைக்கு தென் கொரியா, ஜப்பான், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.