செய்திகள்

இந்தியா - பூட்டான் நட்புறவின் பொன்விழா: லட்சினையை வெளியிட்டார், சுஷ்மா சுவராஜ்

இந்தியா - பூட்டான் நாடுகளுக்கு இடையிலான நட்புறவின் ஐம்பதாம் ஆண்டினை சிறப்பிக்கும் வகையில் சிறப்பு லட்சினையை (லோகோ) வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் இன்று வெளியிட்டார். #India #Bhutan #SushmaSwaraj

மாலை மலர்

புதுடெல்லி:

இந்தியாவின் அண்டை நாடான பூட்டான் நமது நாட்டுடன் வர்த்தகம், பாதுகாப்பு, உள்கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தொடர்ந்து ஒத்துழைப்பு நல்கி வருகிறது. இதுமட்டுமின்றி, இருநாட்டு மக்களும் கலாசாரம் மற்றும் பாரம்பரிய ரீதியான தொடர்புகளை தொடர்ந்து புதுப்பித்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்தியா - பூட்டான் நாடுகளுக்கு இடையிலான நட்புறவின் ஐம்பதாம் ஆண்டினை சிறப்பிக்கும் வகையில் சிறப்பு லட்சினையை (லோகோ) வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் இன்று டெல்லியில் இருந்தவாறு வெளியிட்டார். இந்த வெளியீட்டு விழாவில் நேபாள தலைநகர் திம்புவில் இருந்து அந்நாட்டு வெளியுறவுத்துறை மந்திரி லியோன்போ டாம்ச்சோ டோர்ஜி வீடியோ கான்பிரசிங் மூலம் கலந்துகொண்டார்.

இந்தியா - பூட்டான் நாடுகளுக்கு இடையிலான நட்புறவின் ஐம்பதாம் ஆண்டை நினைவுகூரும் வகையில் இந்த ஆண்டு முழுவதும் இருநாடுகள் தொடர்பான கலாசார நிகழ்ச்சிகள், கண்காட்சி மற்றும் கருத்தரங்கங்கள் நடத்தப்படும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #SushmaSwaraj #TamilNews