ஆறு நாடுகள் பங்கேற்று விளையாடி வரும் சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி தொடர் மலேசியாவில் நடைபெற்று வருகிறது. இந்தியா தனது முதல் ஆட்டத்தில் அர்ஜென்டினாவை எதிர்கொண்டது. இதில் 2-3 எனத் தோல்வியைத் தழுவியது.
2-வது ஆட்டத்தில் இங்கிலாந்தை எதிர்கொண்டது. இந்த ஆட்டம் 1-1 என வெற்றித் தோல்வியின்றி டிராவில் முடிந்தது. நேற்று நடைபெற்ற மூன்றாவது ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது. இதில் 2-4 என தோல்வியடைந்த இந்திய அணி இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை இழந்தது.
இன்று நடைபெற்ற நான்காவது ஆட்டத்தில் இந்தியா, போட்டி நடத்தும் மலேசியாவை எதிர்கொண்டது. இதில் 5-1 என்ற கோல் கணக்கில் மலேசியாவை அபாரமாக வீழ்த்திய இந்திய அணி முதல் வெற்றியை பதிவு செய்தது. இந்திய அணியில் ஷிலானந்த் லக்ரா முதல் கோல் அடித்தார். குர்ஜந்த் சிங் இரண்டு கோல் அடித்தார். சுமித் குமார், ரமந்திப் சிங் ஆகியோரும் கோல் அடித்தனர். மலேசியா அணியில் பைஸல் சாரி ஒரு கோல் அடித்தார்.
முன்னதாக நடைபெற்ற மற்ற ஆட்டங்களில் ஆஸ்திரேலியா 4-1 அயர்லாந்தை வீழ்த்தியது, ஆர்ஜெண்டினா - இங்கிலாந்து இடையிலான ஆட்டம் 1-1 என டிரா ஆனது. இந்தியா நாளை நடைபெறும் கடைசி லீக் போட்டியில் அயர்லாந்தை எதிர்கொள்ள இருக்கிறது. #AzlanShahCup #INDvMAS