புதுடெல்லி:
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் ஏற்படும் சூழல் ஏற்பட்டால் இரு நாடுகளிலும் உள்ள அணு மின்நிலையங்கள் மற்றும் அணு திட்ட நிலையங்கள் மீது தாக்குதல்கள் நடத்த கூடாது என 1988-ம் ஆண்டு டிசம்பர் 31-ல் இரு நாடுகளுக்கு இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. 1991-ம் ஆண்டு ஜனவரி 27 முதல் இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தது.
மேற்கண்ட ஒப்பந்தத்தின் படி ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி முதல் தேதியில் இரு நாடுகளிலும் உள்ள அணு மின்நிலையங்கள், திட்ட நிலையங்கள் கொண்ட பட்டியலை பரிமாற்றம் செய்து கொள்வது வழக்கம். அதன்படி, இன்று தூதரக அதிகாரிகள் வழியாக 27-வது பட்டியல் பரிமாற்றம் செய்து கொள்ளப்பட்டதாக வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குல்புஷன் ஜாதவ் விவகாரம், எல்லையில் துப்பாக்கிச்சூடு ஆகிய பிரச்சனைகளால் தற்போது இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் விரிசல் விழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.