செய்திகள்

டோக்லாம் எல்லைப் பகுதியில் இருந்து படைகளை திரும்ப பெற இந்தியா-சீனா ஒப்புதல்

சர்ச்சைக்குரிய சிக்கிம் எல்லை அருகே உள்ள டோக்லாம் பகுதியில் இருந்து படைகளை திரும்ப பெற இந்தியா-சீனா ஒப்புதல் தெரிவித்துள்ளன.

மாலை மலர்

புதுடெல்லி:

சிக்கிம் எல்லை அருகே உள்ள டோக்லாம் பகுதியில் சீன ராணுவம் சாலை அமைத்ததை இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தியதால் இரு நாடுகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டு உள்ளது. அங்கு இரு நாடுகளும் படைகளை குவித்து உள்ள நிலையில், இந்தியா தனது படைகளை விலக்கிக்கொள்ள வேண்டும் என சீனா தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.

ஆனால் சிக்கிம் எல்லையில் இருந்து படைகளை வாபஸ் பெற முடியாது என இந்தியா திட்டவட்டமாக கூறிவிட்டது. இதனால் இந்தியா மீது ராணுவ நடவடிக்கை மேற்கொள்வோம் என சீனா மிரட்டி வந்தது. இதனால் சுமார் 2 மாதங்களாக அங்கு போர் பதற்றம் நீடித்து வருகிறது.

இந்நிலையில், சர்ச்சைக்குரிய டோம்லாம் எல்லைப் பகுதியில் இருந்து படைகளை திரும்ப பெற இந்தியா-சீனா ஒப்புதல் தெரிவித்துள்ளன. இது தொடர்பாக வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”டோக்லாம் பிரச்சனை தொடர்பாக இந்தியா சீன தூதரக அதிகாரிகள் இடையே கடந்த சில வாரங்களாக பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. அப்போது, தங்களது நிலைப்பாட்டையும், கவலைகளையும் தெரிவித்தோம். பேச்சுவார்த்தையில் படைகளை திரும்ப பெறுவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்வதாற்காக பிரதமர் நரேந்திர மோடி நாளை சீனா செல்ல உள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.