செய்திகள்

குல்பூஷன் ஜாதவுக்கு தூதரக உதவி: பாகிஸ்தானிடம் இந்தியா மீண்டும் வலியுறுத்தல்

பாகிஸ்தான் நாட்டு சிறையில் இருக்கும் குல்பூஷன் ஜாதவுக்கு, தூதரக உதவி அளிப்பதற்கு அனுமதிக்க வேண்டும் என அந்நாட்டு அரசை இந்தியா மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

இந்தியாவைச் சேர்ந்த முன்னாள் கடற்படை அதிகாரி குல்பூஷன் ஜாதவ், பாகிஸ்தானில் உளவு பார்த்ததாகவும் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் கூறி அந்நாட்டு ராணுவ கோர்ட் அவருக்கு மரண தண்டனை விதித்தது.

குல்பூஷன் ஜாதவுக்கு தூதரக உதவிகள் மறுக்கப்பட்டதால், அவரது தண்டனையை எதிர்த்து நெதர்லாந்தில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியா மேல்முறையீடு செய்தது.

அப்போது, ‘வழக்கின் தீர்ப்பு வரும்வரை குல்பூஷன் ஜாதவின் மரண தண்டனையை நிறுத்தி வைக்கவேண்டும்’ என சர்வதேச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த உத்தரவை மறுவிசாரணை செய்ய வேண்டும் என பாகிஸ்தான் மனுதாக்கல் செய்திருந்தது.

மரண தண்டனை விதிக்கப்பட்ட குல்பூஷன், தனது தண்டனையை ரத்து செய்யக்கோரி சமீபத்தில் பாகிஸ்தான் ராணுவ தளபதி ஜாவித் பஜ்வாவுக்கு கருணை மனு அனுப்பியிருந்தார்.

இந்நிலையில், இந்தியா மற்றும் பாகிஸ்தானில் சிறையில் உள்ளவர்கள் குறித்த பட்டியலை தூதரக அதிகாரிகள் இன்று பரிமாறிக் கொண்டனர். அதில், 500 மீனவர்கள் உள்பட 546 இந்தியர்கள் பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அப்போது, இந்திய அதிகாரிகள், சிறையில் உள்ள குல்பூஷன் ஜாதவுக்கு தூதரக உதவி அளிப்பதற்கு பாகிஸ்தான் அரசு அனுமதிக்க வேண்டும் என மீண்டும் வலியுறுத்தினர்.