தஞ்சாவூர்:
நாடு முழுவதும் இன்று 73-வது சுதந்திர தினவிழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது. அதேப்போல் தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் சுதந்திர தின விழா நடைபெற்றது.
காலை 9.05 மணிக்கு கலெக்டர் அண்ணாதுரை கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். அப்போது தேசிய கீதம் ஒலிக்கப்பட்டது. அனைவரும் எழுந்து நின்று நாட்டுக்காக போராடி விடுதலை பெற்று தந்த தேச தலைவர்கள், தியாகிகளை நினைவு கூர்ந்தனர். இதையடுத்து காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதை கலெக்டர் அண்ணாதுரை, தஞ்சை சரக டி.ஐ.ஜி. லோகநாதன், போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்வரன் ஆகியோர் ஏற்று கொண்டனர்.
பின்னர் கலெக்டர் அண்ணாதுரை, போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்வரன், வருவாய் ஆய்வாளர் சக்திவேல் ஆகியோர் உலக அமைதிக்காகவும், சுதந்திரம் அடைந்து விட்டதை வலியுறுத்தும் வகையிலும் வெண்புறாவை வானில் பறக்க விட்டனர். இதையடுத்து தியாகிகள் மற்றும் அவர்களது வாரிசுகளுக்கு அவர்கள் இருந்த இடத்துக்கே சென்று அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கலெக்டர் கவுரவித்தார்.
காவல் துறையில் சிறந்து விளங்கிய போலீசாருக்கு கலெக்டர் பதங்கங்களையும், மெடல்களையும் வழங்கி கவுரவித்தார். இதேப்போல் டாக்டர்கள், குழந்தை நல அலுவலக துறை, தாட்கோ உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கினார். மாற்று திறனாளிகள் நலத்துறை சார்பில் 17 ஆயிரம் மதிப்பில் மடக்கு சக்கர நாற்காலி, காதொலி கருவி உள்ளிட்டவற்றை 4 மாணவர்களுக்கும், 7 பேருக்கு 10 ஆயிரத்து 500 மதிப்பில் மனவளர்ச்சி குன்றியோருக்கான மாதாந்திர பராமரிப்பு உதவி தொகையும் வழங்கினார். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் 49 ஆயிரம் மதிப்பிலான விலையில்லா தையல் எந்திரம் 10 பேருக்கும் வழங்கினார். இதேபோல் வருவாய் துறை, தோட்டகலை, வேளாண்துறை, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்பில் பயளாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிளார். மொத்தம் ரூ. 1 கோடியே 27 லட்சத்து 57 ஆயிரத்து 875 மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
இதைதொடர்ந்து பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் கலந்து கொண்ட கலைநிகழ்ச்சி நடைபெற்றது. பெரிய கோவில் வடிவம் மாதிரியை தத்ரூபமாக நம் கண்முன் கொண்டு வந்து பெரிய கோவில் வரலாற்றை சித்தரிக்கும் வகையில் மாணவர்கள் நிகழ்த்தி காட்டிய நாடகம் அனைவரையும் கவர்ந்தது. முடிவில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் ஆர்.டி.ஓ. சுரேஷ், மாவட்ட குழந்தை நல அலுவலர் நடராஜன், டி.எஸ்.பி.க்கள் ரவிசந்திரன், சீதாராமன். மருத்துவ கல்லூரி டீன் குமுதா லிங்கராஜ். இன்ஸ்பெக்டர்கள் சுப்பிர மணியன், செங்குட்டுவன் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள், போலீசார், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இத்தாலி நாட்டில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து நிகழ்ச்சிளை கண்டு ரசித்தனர். பாதுகாப்பு பணிக்காக 500 போலீசார் குவிக்கப்பட்டனர்.