செய்திகள்

நீட் தேர்வுக்கு எதிராக தொடரும் போராட்டம்: கோவை அரசு கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை

மாணவர்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடலாம் என்பதால் கோவை அரசு கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டது.

மாலை மலர்

அரியலூர் மாணவி அனிதா தற்கொலையை தொடர்ந்து தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக போராட்டங்கள் வலுத்து வருகிறது.

கோவை மாவட்டத்தில் மாணவர்கள், இளைஞர்கள், வக்கீல்கள், பல்வேறு அமைப்புகள் சார்பில் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகிறது. கோவை அரசு கலை கல்லூரியில் மாணவர்கள் நேற்று 2-வது நாளாக வகுப்புகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்லூரி வளாகத்தில் அமர்ந்து மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோ‌ஷங்கள் எழுப்பினர். கல்லூரி முதல்வர் நளினி மற்றும் பேராசிரியர்கள் அங்கு சென்று மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

எனினும் மாணவர்கள் போராட்டத்தை கைவிடவில்லை. ரேஸ்கோர்ஸ் போலீசாரும் சம்பவ இடத்துக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

மாணவர்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடலாம் என்பதால் கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டது. கல்லூரி திறக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று கல்லூரி முதல்வர் நளினி கூறினார்.

இதைத்தொடர்ந்து கல்லூரி விடுதியும் மூடப்படுவதாகவும், மாணவர்கள் அங்கு தங்கியிருக்க அனுமதியில்லை என்றும் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கான அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டது.

இதற்கு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்து நேற்று இரவு திருச்சி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். வெளி மாவட்டங்களை சார்ந்த நாங்கள் எங்கு செல்வோம்? என்று கூறி கோ‌ஷங்கள் எழுப்பினர். போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதுதொடர்பாக இன்று கல்லூரி முதல்வரை சந்தித்து பேசலாம் என்று போலீசார் அறிவுறுத்தினர். இதையடுத்து மாணவர்கள் கலைந்து சென்றனர்.

கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டது குறித்து கல்லூரி நுழைவு வாயில் முன்பு அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. இன்று காலை வழக்கம் போல கல்லூரிக்கு வந்த மாணவர்கள் அதைப்பார்த்து திரும்பி சென்றனர்.

இதற்கிடையே பீளமேடு, நவஇந்தியா பகுதிகளில் மாணவர்கள் போராட்டம் நடத்த திரண்ட வண்ணம் இருந்தனர். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மாணவர்களுக்கு அறிவுரை கூறி அனுப்பினர்.

மாணவர்கள் போராட்டம் காரணமாக வ.உ.சி.மைதானம், கொடிசியா மைதானம், காந்தி பூங்கா, காந்திபுரம் மேம்பாலம் உள்ளிட்ட நகரின் முக்கிய இடங்கள் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

போலீசார் வாகனங்களில் சென்று ரோந்து சுற்றி வருகின்றனர். மாணவர்கள் திரளாக கூடினால் அங்கு போலீசார் விரைந்து சென்று அவர்களை கலைந்து போகச் செய்கின்றனர்.

ஆனைமலையை அடுத்துள்ள வேட்டைக்காரன்புதூரில் விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் மாணவி அனிதாவின் தற்கொலைக்கு நீதி கேட்டும், நீட் தேர்வை கண்டித்தும் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

ஒன்றிய செயலாளர் கம்பர் தலைமை தாங்கினார். செந்தில் முருகன் வரவேற்று பேசினார்.

மாசானமுத்து, வளர்மதி, விஜய பிரபாகரன் தமிழ் குமரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட செயலாளர் பிரபு மாணவி அனிதாவின் தற்கொலைக்கு காரணமான நீட் மருத்துவ தேர்வைக் கண்டித்து பேசினார்.

காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் சந்திரசேகரன் நன்றி கூறினார்.

ஆனைமலையை அடுத்துள்ள நாலா மூலை சுங்கம் ஸ்ரீராமு கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் நேற்று நீட் தேர்வை திரும்ப பெறக் கோரியும் மாணவி அனிதாவின் மரணத்திற்கு நீதி கோரியும் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்

கல்லூரியைச் சேர்ந்த 800-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் நீட் தேர்வினை வாபஸ் பெறக் கோரி கோ‌ஷம் எழுப்பினர். சுமார் 2 மணி நேரம் கல்லூரி வாசலில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.