செய்திகள்

அக்டோபர் 15-ந் தேதி முதல் 18 ரெயில்களின் வேகம் அதிகரிப்பு: பயண நேரம் குறைகிறது

நெல்லை, முத்துநகர், வைகை உள்பட 18 ரெயில்களின் வேகம் அக்டோபர் 15-ந் தேதி முதல் அதிகரிக்கப்படுகிறது. இதனால் ரெயில்களின் பயண நேரம் 10 முதல் 30 நிமிடங்கள் வரை குறையும்.

மாலை மலர்

சென்னை:

தெற்கு ரெயில்வேயின் ரெயில் கால அட்டவணை ஆண்டுதோறும் அக்டோபர் 1-ந் தேதி வெளியிடப்படும். இந்த ஆண்டு கால அட்டவணை வெளியிடுவது தாமதம் ஆகிறது.

தற்போது உள்ள கால அட்டவணைப்படி அக்டோபர் 14-ந் தேதி வரை ரெயில்கள் இயக்கப்படும். 15-ந் தேதியில் இருந்து புதிய அட்டவணையின் படி ரெயில்களை இயக்க தெற்கு ரெயில்வே திட்டமிட்டுள்ளது.

ரெயில்வே கால அட்டவணையில் ரெயில்களின் வேகம் அதிகரித்தல், முக்கிய ரெயில் நிலையங்களுக்கு இடையே நீட்டித்தல் மற்றும் ரெயில்களின் நேரத்தை மாற்றி அமைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும். அதன்படி எழும்பூரில் இருந்து தென் மாவட்டங்களுக்கு புறப்பட்டு செல்லக்கூடிய 18 ரெயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

விழுப்புரம்-திருச்சி இடையே இரண்டாவது ரெயில் பாதை பணி முடிந்து இரு வழி பாதையில் ரெயில் போக்குவரத்து நடப்பதால் மலைக்கோட்டை, பாண்டியன், வைகை, பல்லவன், நெல்லை, முத்துநகர், கன்னியாகுமரி, பொதிகை, ராமேஸ்வரம் உள்ளிட்ட 18 ரெயில்களின் வேகம் அதிகரிக்கப்பட உள்ளது.

இதனால் ரெயில்களின் பயண நேரம் 10 முதல் 30 நிமிடங்கள் வரை குறையும்.

தாம்பரம் முனையத்தில் இருந்து தற்போது அசாம் மாநிலம் திப்நகர் மற்றும் கவுகாத்திக்கு வாராந்திர ரெயில்கள் சோதனை ரீதியாக இயக்கப்படுகின்றன. மேலும் எழும்பூரில் இருந்து மும்பை தாதருக்கு இயக்கப்படும்.

தாதர் எக்ஸ்பிரஸ், பீகார் மாநிலம் கயாவுக்கு இயக்கப்படும் கயா வாராந்திர எக்ஸ்பிரஸ் மற்றும் தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் சிறப்பு ரெயில்கள் போன்றவையும் தாம்பரம் முனையத்தில் இருந்து இயக்கப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.