முட்டை 
செய்திகள்

மதுரையில் முட்டை உள்ளிட்ட மளிகை பொருட்கள் விலை உயர்வு

மதுரையில் முட்டை உள்ளிட்ட மளிகை பொருட்கள் விலையேற்றம் ஏழை எளிய மக்களை கடுமையாக பாதித்துள்ளது.

மாலை மலர்

மதுரை:

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்கம் நாடு முழுவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் இன்றுடன் முடிவடைய இருந்த 21 நாட்கள் தேசிய ஊரடங்கு மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

வருகிற 30-ந் தேதி வரை தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

மேலும் கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து பொதுமக்களை பாதுகாக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கொரோனா வைரசுக்கு இதுவரை 12 பேர் பலியாகியுள்ளனர். 1100 க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மதுரையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 14 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்குமா? அல்லது குறையுமா என்று இன்னும் ஓரிரு நாளில் தெரியவரும்.

மதுரை மாவட்டத்தின் கொரோனா தொற்று பரவி உள்ள பகுதிகளில் மருத்துவ குழுவினர் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். ஊரடங்கு கடுமையாக கடைபிடிக்கும் வகையில் போலீசாரும் சாலைகளில் மற்றும் முக்கிய பகுதிகளில் போக்குவரத்தை கணிசமாக தடுத்து வருகிறார்கள்.

மக்கள் அதிகம் கூடும் இடங்களான மார்க்கெட்டுகளில் மற்றும் கடைகளில் சமூக இடைவெளியை கடை பிடித்து பொருள்களை வாங்கவும் பொதுமக்களை வற்புறுத்தி வருகிறார்கள். ஆனாலும் சில இடங்களில் பொதுமக்கள் நோயின் தாக்கம் அறியாமல் சமூக இடைவெளியை கடை பிடிக்காமல் வழக்கம் போல ஒருவரை ஒருவர் நெருக்கிக்கொண்டு பொருட்களை வாங்கு வதையும் காணமுடிகிறது.

இதுதொடர்பாக சுகாதாரத் துறையினரும் போலீசாரும் எத்தனையோ விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் பொதுமக்கள் உணராதவர்கள் ஆகவே இருந்து வருகிறார்கள். இதன் காரணமாக பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன.

இந்த நிலையில் அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் வணிகர்கள் பொதுமக்களுக்கு அரசு ஒரு குறிப்பிட்ட நேர கட்டுப்பாட்டில் பொருட்களை விற்கவும் அதேநேரம் ஊரடங்கு பயன்படுத்தி அதிக விலைக்கு பொருட் களை விற்பதை தடுக்கவும் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.

அமைச்சர் ஆர். பி. உதயகுமார் தலைமையில் மதுரையில் நேற்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முக்கிய வணி கர்கள் வர்த்தகர்கள் கலந்து கொண்டனர். கலெக்டர் வினய் மாநகராட்சி கமிஷனர் விசாகன் போலீஸ் கமி‌ஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆகியோரும் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். அப்போது வணிகர்கள் மற்றும் வியாபாரிகள் அரசின் விதி முறைகளை கடைப்பிடித்து பொதுமக்களுக்கு தேவை யான பொருள்களை விற்பனை செய்வதாக உறுதியளித்தனர்.

மேலும் ஊரடங்கு சமயத்தில் போலீசாரால் வணிகர்களுக்கு பல்வேறு இடர்பாடுகள் ஏற்படுவதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டது. அதனை உடனடியாக நிவர்த்தி செய்யும்படி அமைச்சர் ஆர். பி. உதயகுமார் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

ஊரடங்கின் 21 வது நாளான இன்று மதுரை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்கிச் சென்றனர். காய்கறிகளை பொறுத்தவரை அனைத்துக் காய்கறிகளும் தற்போது சீசன் காலம் என்பதால் வழக்கமான விலையிலே விற்பனை செய்யப்பட்டது. ஒவ்வொரு பகுதிகளிலும் மாநகராட்சி சார்பிலும் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டன.

மளிகை பொருட்களை பொருத்தவரை வெளி மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து கொண்டுவரப்படும் பொருள்கள் விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

இந்த விலையேற்றம் வழக்கமான விலையைவிட 10 முதல் 20 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ஊரடங்கு காரணமாக மாவு வகைகள் உள்ளிட்ட மளிகை பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு இரண்டு ரூபாய்க்கு விற்கப்பட்ட முட்டை இன்று ரூ 4.50முதல் 5 ரூபாய் வரை விலை அதிகரித்துள்ளது. இந்த விலையேற்றம் ஏழை எளிய மக்களை கடுமையாக பாதித்துள்ளது.

எனவே அதிகாரிகள் மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிக்காத வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இந்த ஊரடங்கு காலத்தில் வியாபாரிகள் மீதான கெடுபிடிகளை மாவட்ட நிர்வாகமும் போலீசாரும் தளர்த்தி பொதுமக்களுக்கு உரிய விலையில் அனைத்து பொருட்களும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஊரடங்கை பயன்படுத்தி பொருட்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்யும் வியாபாரிகள், பதுக்கல்காரர்களையும் கண்டறிந்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தான் மதுரை மக்களின் ஒட்டுமொத்த கோரிக்கையாக உள்ளது.