செய்திகள்

சத்யம் சினிமாஸ் தியேட்டர்கள், அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிரடி சோதனை

சத்யம் சினிமாஸ் தியேட்டர்கள், அலுவலகங்கள் என அந்த நிறுவனத்துக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னை:

சசிகலாவின் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் அவர்களின் நிறுவனங்களில் கடந்த 9-ம்தேதி முதல் ஒரு வார காலம் வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர். குறிப்பாக சென்னையில் இளவரசியின் மகன் விவேக்குக்கு சொந்தமாக வேளச்சேரி பீனிக்ஸ் மால் வணிக வளாகத்தில் உள்ள ஜாஸ் சினிமா தியேட்டர்களிலும் தொடர்ந்து சோதனை நடத்தப்பட்டது. இந்த நிறுவனத்தை வாங்கியதில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்துள்ளது.

இந்த சோதனையின் தொடர்ச்சியாக இன்று சென்னையில் சத்யம் சினிமாஸ் நிறுவனத்துக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையைத் தொடங்கி உள்ளனர். சத்யம் சினிமாசுக்கு சொந்தமான தியேட்டர்கள், வீடு, அலுவலகம் என 20-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெறுகிறது.

பெரம்பூர் எஸ் 2 சத்யம் சினிமா தியேட்டர் உரிமையாளர் வீடு மற்றும் செங்குன்றத்தில் உள்ள திரையரங்கு உரிமையாளர் வீட்டிலும் சோதனை நடத்தப்படுகிறது. மேலும் பல இடங்களில் நடத்தப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.