திண்டிவனம்:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நேருவீதி, மாரியம்மன் கோவில் வீதி, ராஜாஜி வீதி போன்ற இடங்களில் ஏராளமான நகை கடைகள் உள்ளன. இதில் சில நகைகடைகளில் வரி ஏய்ப்பு செய்ததாக புகார்கள் வந்தது.
இதைத்தொடர்ந்து விழுப்புரம் உதவி கமிஷனர் செந்தில்பிரபு தலைமையில் வருமான வரித்துறை அதிகாரிகள் 25 பேர் நேற்று மாலை 3 மணிக்கு திடீரென்று திண்டிவனம் நேரு வீதி, மாரியம்மன் கோவில் பகுதிகளில் உள்ள 3 நகைகடைகளுக்கு சென்றனர்.
அவர்கள் குழுக்களாக சென்று அங்கு அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கடைகளில் ஊழியர்களும், கடை அதிபர்கள் மட்டும் உள்ளே இருந்தனர். மற்றவர்களை வெளியே அனுப்பி விட்டு கடைகளை பூட்டிக்கொண்டு சோதனை நடத்தினர்.
அங்கு எவ்வளவு நகை விற்பனையாகி உள்ளது. அந்த நகைகளுக்கு உரிய ரசீது வழங்கப்பட்டுள்ளதா? என விசாரணை நடத்தினர்.
மேலும் ஜி.எஸ்.டி. வரி விதிப்புக்கு முன்பு எவ்வளவு நகை விற்பனை செய்யப்பட்டது. தற்போது எவ்வளவு நகைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது என ஆய்வு செய்தனர்.
இது தொடர்பாக நகை கடை உரிமையாளர்களிட மும் தீவிர விசாரணை நடத்தினர்.
நேற்று மாலை தொடங்கிய இந்த சோதனை இன்று காலை 6 மணி வரை விடிய விடிய நடைபெற்றது.
அப்போது முக்கிய ஆவணங்கள் சிக்கியது. அதனை அதிகாரிகள் கைப்பற்றினர்.
இந்த அதிரடி சோதனை முடிந்த பின்பு அவர்கள் கார்களில் புறப்பட்டு சென்றனர்.
திண்டிவனத்தில் ஒரே நேரத்தில் 3 நகை கடைகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews