செய்திகள்

கொடநாடு எஸ்டேட்டில் இருந்து வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா? மானேஜரிடம் விசாரணை

வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடாவை கொடநாடு எஸ்டேட் மானேஜர்தான் பொறுப்பு ஏற்று செய்தார் என்ற தகவல் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு கிடைத்திருப்பதால் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

சென்னை:

சசிகலா குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் 5 நாட்கள் நடத்திய அதிரடி சோதனையில் நூற்றுக் கணக்கான ஆவணங்கள், ரொக்கப் பணம், நகைகள் சிக்கின.

கைப்பற்றப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்ததில் சசிகலா குடும்பத்தினர் போலி நிறுவனங்கள் நடத்தி ரூ.1400 கோடிக்கு மேல் வரி ஏய்ப்பு செய்திருப்பது தெரிய வந்தது. அது மட்டுமின்றி தமிழகம் முழுவதும் சொத்துகள் வாங்கி இருப்பது தெரிந்தது.

குறிப்பாக ரூ.1000 கோடி மதிப்புள்ள ஜாஸ் சினிமாஸ் காம்ப்ளக்சை வாங்கி இருப்பதை உறுதிப்படுத்தினார்கள். அந்த ரூ.1000 கோடி பணம் எங்கிருந்து, எப்படி வந்தது என்று அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். 187 இடங்களில் நடந்த சோதனையில் ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு விதமான ஆவணங்கள் கிடைத்துள்ளன.

இதுபற்றி அது தொடர்புடையாளர்களுக்கு “சம்மன்” அனுப்பி வரவழைத்து அதிகாரிகள் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். இந்த விசாரணைகள் மூலம் பல புதிய தகவல்கள் வெளியில் வர தொடங்கியுள்ளன.

கொடநாட்டில் சசிகலா குடும்பத்தினருக்கு சொந்தமாக இரண்டு பெரிய தேயிலை எஸ்டேட்டுகள் உள்ளன. அதில் ஜெயலலிதா தங்கி ஓய்வு எடுக்கும் எஸ்டேட்டுக்குள் அதிகாரிகளால் விரிவான விசாரணை நடத்த இயலவில்லை. கர்சன் எஸ்டேட்டில் மட்டும் சோதனை நடந்தது.

6-வது நாளாக நீடித்த அந்த சோதனை நேற்று தான் முடிவுக்கு வந்தது. கர்சன் எஸ்டேட்டில் இருந்து அதிகாரிகள் எதிர் பார்த்த அளவை விட மிக அதிக அளவில் ஆவணங்கள் கிடைத்தன. இதையடுத்து கொடநாடு எஸ்டேட் மானேஜர் நடராஜனை அதிகாரிகள் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளனர்.

நடராஜனை வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த 2 நாட்களாக மிகத் தீவிரமாக விசாரித்தனர். அவரது சில உறவினர்களும் அழைத்து விசாரிக்கப்பட்டனர். ஆவணங்களை காட்டி அவர்களிடம் அதிகாரிகள் கேள்விகள் கேட்டனர்.

இந்த விசாரணை தொடர்பான தகவல்கள் தற்போது தெரிய வந்துள்ளன.

தமிழக சட்டசபைக்கு கடந்த ஆண்டு தேர்தல் நடந்த போது 234 தொகுதிகளுக்கும் அ.தி.மு.க. பணம் பட்டுவாடா செய்ததாக கூறப்பட்டது. அந்த பணம் பூத் கமிட்டி உறுப்பினர்கள் வரை அனைத்து அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கும் பிரித்து கொடுக்கப்பட்டதாக வருமான வரித்துறைக்கு தகவல் கிடைத்தது.

இந்த பணப் பட்டுவாடா கொடநாடு எஸ்டேட்டில் இருந்து செய்யப்பட்டதாகவும் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிந்தது. இதனால்தான் கொடநாடு மற்றும் கர்சன் எஸ்டேட்டில் கடந்த 6 நாட்களாக சோதனை நடந்தது.

வருமான வரி அதிகாரிகள் எந்த இலக்குடன் கர்சன் எஸ்டேட்டுக்குள் புகுந்தார்களோ, அதற்கேற்ப ஆவணங்ள் சிக்கியதாக கூறப்படுகிறது. மேலும் அந்த ரகசிய ஆவணங்களில் தேர்தல் சமயத்தில் நடந்த பணப்பட்டுவாடா பற்றிய எல்லா தகவல்களும் இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் அந்த பணப்பட்டு வாடாவை கொடநாடு எஸ்டேட் மானேஜர்தான் பொறுப்பு ஏற்று செய்தார் என்று ஒரு தகவல் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு கிடைத்திருந்தது. அந்த தகவலை உறுதிப்படுத்தவே அதிகாரிகள் கடந்த 2 நாட்களாக நடராஜனிடம் விசாரணையை தீவிரப்படுத்தியதாக தெரிய வந்துள்ளது.

இந்த விசாரணைகளின் போது மானேஜர் நடராஜன் எத்தகைய பதில்களை கூறியுள்ளார் என்பது தெரிய வில்லை. அவரது பதில்கள் அனைத்தும் எழுத்துப் பூர்வமாக மட்டுமின்றி வீடியோவிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது சசிகலா குடும்பத்தினருக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

இதற்கிடையே கிரீன் டீ எஸ்டேட் மேலாளர் பழனி குமாரையும் அதிகாரிகள் நேற்று முன்தினம் முதல் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்து விசாரித்தனர் நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில் கிரீன் டீ எஸ்டேட்டுக்கு சென்ற அதிகாரிகள் ஒரு சூட்கேஸ் மற்றும் 4 பைகளில் ஆவணங்களை எடுத்து வந்தனர்.

இந்த சோதனையில் சென்னை, மன்னார்குடி, ஐதராபாத்தில் உள்ள திராட்சை தோட்டம் குறித்த ஆவணங்ளும் கைப்பற்றப்பட்டதாக தெரிகிறது. நேற்று காலை முதல் கொடநாடு மற்றும் கிரீன் டீ எஸ்டேட் மேலாளர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.

இவர்களில் கிரீன் டீ எஸ்டேட் மேலாளர் பழனிகுமார் உள்ளிட்ட 20 பேர் சென்னையில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பி உள்ளனர்.

கொடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜனிடம் விசாரணை நடத்துவதற்காக அவரை வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று இரவு 8.43 மணிக்கு கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்திற்கு அழைத்து வந்தனர்.

அங்குள்ள ஒரு அறையில் வைத்து நடராஜனிடம் தொடர் விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணை இரவு 11 மணி வரை நடந்தது. அதன் பின்னர் அவரை அனுப்பி வைத்தனர். மீண்டும் நாளை (16-ந் தேதி) ஆஜராகுமாறு நடராஜனுக்கு சம்மன் அனுப்பினர்.

நடராஜன் பெயரில் 60 ஏக்கர் பரப்பளவு கொண்ட எஸ்டேட் வாங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சோதனையின் போது கிடைத்த ஆவணங்களை வைத்து விசாரித்ததாக கூறப்படுகிறது.

கொடநாடு எஸ்டேட்டுகளில் தான் முக்கிய சொத்து ஆவணங்கள் வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி 2 மாதங்களுக்கு முன்பு தமிழ் நாட்டைச் சேர்ந்த முக்கிய பிரமுகர் ஒருவர் டெல்லி சென்று வருமான வரித் துறை தலைவரிடம் தகவல்கள் தெரிவித்ததாக தெரிய வந்துள்ளது.

அந்த முக்கிய பிரமுகர் கடந்த சில ஆண்டுகளாக சசிகலா குடும்பத்தினருக்கு எங்கெங்கு சொத்துகள், ஆவணங்கள் உள்ளது என்ற தகவலை ரகசியமாக பெற்று தொகுத்து வைத்திருந்தாராம்.

அந்த பைலை அவர் அப்படியே வருமான வரித் துறையிடம் வழங்கியதாக தெரிகிறது. அந்த பைலில் இருந்த தகவல்களை வைத்தே 1800 அதிகாரிகள் களம் இறக்கப்பட்டு மிகத் துல்லியமாக சோதனைகள் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.