செய்திகள்

புதுவை ஆரோவில் தினகரன் வீட்டில் மீண்டும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை

ஆரோவில்லில் உள்ள தினகரன் பண்ணை வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.

சேதராப்பட்டு:

கடந்த நவம்பர் மாதம் தமிழ்நாடு முழுவதும் சசிகலா மற்றும் டி.டி.வி. தினகரன் குடும்பத்தினர் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.

தினகரனுக்கு புதுவை அருகே உள்ள ஆரோவில்லில் பண்ணை வீடு உள்ளது. பல ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்ட தோட்டத்துக்கு மத்தியில் இந்த வீடு அமைந்துள்ளது.

இந்த வீட்டிலும் அப்போது வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். 2 நாட்கள் இந்த சோதனை நீடித்தது. அங்கிருந்து பல்வேறு ஆவணங்களை அவர்கள் எடுத்து சென்றனர். அப்போது ஒரு அறைக்குள் மட்டும் சீல் வைத்து விட்டு சாவியை எடுத்து சென்றார்கள்.

இன்று காலை வருமான வரி அதிகாரிகள் 3 பேர் அங்கு வந்தனர். அவர்கள் தினகரன் வீட்டில் சோதனையிட்டு வருகிறார்கள் என்று கூறப்பட்டது. ஆனால், அவர்கள் சோதனை எதுவும் நடத்தவில்லை.

ஏற்கனவே சீல் வைத்துள்ள அறைக்குள் வந்த அவர்கள் அந்த சீலை அகற்றி விட்டு சாவியை தோட்ட ஊழியர் முத்துவிடம் ஒப்படைத்தனர். இது சம்பந்தமாக 2 பேரிடம் சாட்சி கையெழுத்து பெற்று கொண்டனர்.

1¼ மணி நேரம் அந்த வீட்டில் இருந்த அவர்கள் பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். தினகரன் வீட்டில் இருந்து எந்த பொருளையும் எடுத்து செல்லவில்லை.

வீட்டுக்கு வருவது தொடர்பாக முன்கூட்டியே தகவல் தெரிவித்து விட்டு தான் வந்தனர். வருமான வரி அதிகாரிகள் வந்ததை அடுத்து 10-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டு இருந்தனர். #tamilnews #dinakaran #Incometax

SCROLL FOR NEXT