செய்திகள்

தமிழகத்தில் கவர்னர் ஆட்சிக்கு ஒத்திகை நடக்கிறது: நாஞ்சில் சம்பத்

கவர்னரின் செயல்பாடுகளை உற்றுபார்க்கும்போது தமிழகத்தில் கவர்னர் ஆட்சிக்கு ஒத்திகை பார்க்கப்படுகிறதா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக நாஞ்சில் சம்பத் கூறினார்.

மாலை மலர்

அ.தி.மு.க. தினகரன் அணியின் ஆதரவாளரான நாஞ்சில் சம்பத், அவரது சொந்த ஊரான மணக்காவிளையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

தமிழக கவர்னர் அரசு நிர்வாகத்தில் அத்துமீறி செயல்படுகிறார். மாநிலத்தின் கவர்னர் என்பவர் சட்ட விதிகளுக்குட்பட்டு நடக்க வேண்டும்.

தமிழகத்தில் இதற்கு மாறான நிலை ஏற்பட்டுள்ளது. இப்போதைய கவர்னரின் செயல்பாடுகளை உற்றுபார்க்கும்போது தமிழகத்தில் கவர்னர் ஆட்சிக்கு ஒத்திகை பார்க்கப்படுகிறதா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

அரசின் செயல்பாடு குறித்து அதிகாரிகளுடன் கவர்னர் ஆய்வு நடத்தி உள்ளார். கவர்னரின் செயல்பாட்டை தமிழக அரசும், அமைச்சர்களும் வரவேற்று கருத்து தெரிவித்துள்ளனர். இதில் ஆச்சரியப்பட எதுவும் இல்லை.

இவர்கள் மத்திய அரசின் எடுபிடிகளாக செயல்பட தொடங்கி பல காலம் ஆகி விட்டது.

தமிழக மீனவர்களை இதுவரை சிங்கள ராணுவம் மட்டுமே தாக்கி வந்தது. இப்போது இந்திய ராணுவம் தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி உள்ளது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

இனிமேல் இதுபோன்ற தாக்குதல் நடைபெறாது என்று கடலோர காவல் படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள். தமிழகத்தை சேர்ந்தவரும், மத்திய பாதுகாப்புத்துறை மந்திரியுமானவர் மீனவ மக்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் பேச வேண்டும். இல்லையேல் மக்கள் கொந்தளிக்கும் நிலை ஏற்படும்.

தமிழகத்தில் ஒரு குடும்பத்தை மையமாக வைத்து வருமான வரி சோதனை நடத்தப்பட்டுள்ளது. இதற்கு பின்னால் மிகப்பெரிய அரசியல் விளையாட்டு உள்ளது.

தமிழக சட்டசபையில் நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அது ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. தற்போது இந்த தீர்மானத்தை காணவில்லையென மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி கூறி உள்ளார்.