சென்னையில் இருந்து நெல்லை, தூத்துக்குடி, மதுரை, கோவை போன்று நீண்ட தூரங்களுக்கு இயக்கப்படும் ஆம்னி பஸ்களில் கட்டணங்கள் வசூலிப்பதில் எந்த வரைமுறையும் கிடையாது.
தங்கள் இஷ்டத்துக்கு அவர்கள் நிர்ணயம் செய்வதுதான் கட்டணத்தொகையாக உள்ளது. அதுவும் முக்கிய நாட்களில் ஆம்னி பஸ்களின் கட்டணம் எவ்வளவு உயர்த்தப்படும் என்று யாருக்குமே தெரியாது.
அரசு பஸ்களில்தான் கட்டணங்கள் சீராக, சரியாக, நியாயமாக வசூலிக்கப்படுவதாக லட்சக்கணக்கான பயணிகள் நம்பிக்கையுடன் பயணம் செய்தபடி உள்ளனர். ஆனால் அரசு போக்குவரத்துக்கழக பஸ்களிலும் ஓசையின்றி, முன் அறிவிப்பு எதுவும் இல்லாமல் கட்டணங்கள் உயர்த்தப்பட்டு இருப்பது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெரிய வந்துள்ளது.
சென்னை அய்யப்பன் தாங்கலைச் சேர்ந்த சிட்டிசன் செந்தில் என்பவர் மூலம் இது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
2012-ம் ஆண்டு முதல் அவர் தொடர்ச்சியாக மேற்கொண்ட சட்ட நடவடிக்கைகள் காரணமாக, சென்னையில் சாதாரண பஸ்களில் எக்ஸ்பிரஸ் பஸ்சுக்குரிய கட்டணம் வசூலிப்பது, பயணத் தொலைவை கூடுதலாக மாற்றி எழுதி அதிக கட்டணம் வசூலிப்பது, மெட்ரோ மற்றும் பாலம் கட்டும் பணிகள் நடப்பதை காரணம் காட்டி கூடுதல் கட்டணம் வசூலிப்பது ஆகியவை ரகசியமாக நடப்பது ஆதாரப்பூர்வமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கடைசியாக கடந்த 2011-ம் ஆண்டு பஸ் கட்டணத்தை சீரமைத்து அறிவிப்பு வெளியிட்டன. சென்னையில் சாதாரண பஸ்களில் கிலோ மீட்டருக்கு 42 பைசாவும், எக்ஸ்பிரஸ் பஸ்களில் கிலோ மீட்டருக்கு 56 பைசாவும் வசூலிக்க வரைமுறை செய்யப்பட்டது.
ஆனால் உண்மையில் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை என்று கூறப்படுகிறது. 90 சதவீத பஸ்களை எக்ஸ்பிரஸ் பஸ்களாக மாற்றி விட்டதாக புகார்களும், குற்றச்சாட்டுகளும் எழுந்தன.
உதாரணத்துக்கு கோயம்பேடில் இருந்து பூந்தமல்லிக்கு கிண்டி, போரூர் வழியாக இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் பஸ்களில் ரூ.14 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கோயம்பேடில் இருந்து மதுரவாயல் வழியாக பூந்தமல்லிக்கு இயக்கப்படும் பஸ்களில் ரூ.9 கட்டணம் வசூலிக்கப்பட்டது.
போரூர் மேம்பாலம் கட்டத் தொடங்கியதும் கிண்டி வழியாக இயக்கப்பட்ட மாநகர பஸ்கள் அனைத்தும் மதுரவாயல் வழியாக இயக்கப்படுகின்றன. அந்த பஸ்களில் தொலைவு குறைவால் ரூ.9 கட்டணம் வசூலிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் தொடர்ந்து 14 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இதையடுத்து ஏற்கனவே மதுரவாயல் வழியாக இயக்கப்படும் மாநகர பஸ்களிலும் கட்டணம் ரூ. 9ல் இருந்து ரூ.14 ஆக உயர்த்தப்பட்டு விட்டது. இந்த ரூ. 5 கட்டண உயர்வு இன்று வரை அமலில் உள்ளது.
மோட்டார் வாகன சட்டம் 246-வது பிரிவின் படி எக்ஸ்பிரஸ் பஸ்கள் 80 கிலோ மீட்டர் தொலைவுக்கு குறைவாக இயக்கப்பட கூடாது என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் சென்னையில் 20 கிலோ மீட்டர், 30 கிலோ மீட்டர் தொலைவுகளுக்கு எல்லாம் எக்ஸ்பிரஸ் பஸ்கள் இயக்கப்படுகின்றன.
உதாரணத்துக்கு செங்குன்றத்தில் இருந்து பொன்னேரிக்கு (21 கி.மீ.) பொன்னேரியில் இருந்து பழவேற்காடுக்கு (20 கி.மீ.) திருவள்ளூரில் இருந்து ஊத்துக்கோட்டைக்கு (25 கி.மீ.), திருவள்ளூரில் இருந்து ஸ்ரீபெரும்புதூருக்கு (22 கி.மீ.) ஆகிய வழித்தடங்களில் எல்லாம் எக்ஸ்பிரஸ் பஸ்கள் இயக்கப்படுகின்றன. வருமான இழப்பை சரிகட்ட இப்படி செய்துள்ளதாக அதிகாரிகள் சொல்கிறார்கள்.
சில இடங்களில் உண்மையான தூரத்தை, அதிக கிலோ மீட்டர் உள்ளது போல பதிவேடுகளில் குறிப்பிட்டும் அதிக கட்டணம் வசூலிப்பது தெரிய வந்துள்ளது. உதாரணத்துக்கு கோயம்பேட்டில் இருந்து திருவான்மியூர் 19 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
ஆனால் போக்குவரத்து கழக பதிவேடுகளில் அந்த தூரத்தை 26 கிலோ மீட்டர் என்று குறிப்பிட்டு அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கோயம்பேட்டில் இருந்து ஆவடிக்கு 17 கிலோ மீட்டர்தான். ஆனால் பதிவேடுகளில் 22 கிலோ மீட்டர் என்று குறிப்பிட்டு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இந்த ரகசிய கட்டண உயர்வு கடந்த சில ஆண்டுகளாக ஓசையின்றி அமலில் உள்ளது. நிறைய கண்டக்டர்களுக்கே இதுபற்றி தெரியாது. மேலாளர் உத்தரவுக்கு ஏற்ப அவர்கள் கட்டண வசூல் செய்கிறார்கள்.
முதலில் சாதாரண பஸ்கள் அனைத்தும் எக்ஸ்பிரஸ் பஸ்களாக மாற்றப்பட்டன. பிறகு இடங்களுக்கு இடையில் உள்ள தூரத்தில் மாற்றம் செய்யப்பட்டது. இப்படி பல வகைகளில் அரசு போக்குவரத்து கழக பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
சென்னையில் மட்டுமின்றி தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் அரசு பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது தெரிய வந்துள்ளது. சென்னையில் மெட்ரோ பணிகள் நடப்பதால் சுற்றி செல்ல வேண்டி இருப்பதாக சில பஸ்களில் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அது போல வெளி மாவட்டங்களிலும் பல்வேறு காரணங்களை கூறி கட்டண உயர்வு செய்யப்பட்டுள்ளது. வருவாய் இழப்பை சரிகட்ட இத்தகைய நடைமுறை பின்பற்றப்படுவதாக கூறப்பட்டாலும் போக்குவரத்து கழக உயர் அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது யாரும் உரிய பதிலை அளிக்க முன் வரவில்லை.