செய்திகள்

உத்தராகண்ட்: முதல் மந்திரியின் 9 மாத டீ, ஸ்நாக்ஸ் செலவு ரூ.68 லட்சம்

உத்தராகாண்ட் மாநில முதல் மந்திரி, தான் பதவியேற்ற ஒன்பது மாதங்களில் டீ மற்றும் ஸ்நாக்ஸ் வகையறாக்களுக்கு மட்டும் 68 லட்சம் ரூபாய் செலவழித்துள்ளது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெரிய வந்துள்ளது.

மாலை மலர்

டேராடூன்:

உத்தராகாண்ட் மாநில முதல் மந்திரி, தான் பதவியேற்ற ஒன்பது மாதங்களில் டீ மற்றும் ஸ்நாக்ஸ் வகையறாக்களுக்கு மட்டும் 68 லட்சம் ரூபாய் செலவழித்துள்ளது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெரிய வந்துள்ளது.

உத்தரகாண்ட் மாநிலத்தின் முதல் மந்திரியாக பதவி வகித்து வருபவர் பா.ஜ.க.வைச் சேர்ந்த திரிவேந்திர சிங் ராவத். இவர் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் மந்திரியாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

இதற்கிடையே, ஹேமந்த் சிங் குனியா என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், முதல் மந்திரி அலுவலகத்தில் கடந்த மார்ச் மாதம் பதவியேற்றது முதல் டீ மற்றும் ஸ்நாக்ஸ் வகையறாக்களுக்கு எவ்வளவு ரூபாய் செலவிட்டுள்ளது என கேட்டு விண்ணப்பித்திருந்தார்.

இந்நிலையில், முதல் மந்திரி திரிவேந்திர சிங் அரசு, கடந்த 9 மாதத்தில் மட்டும் டீ மற்றும் ஸ்நாக்சுக்கு என மொத்தம் 68 லட்சத்து 59 ஆயிரத்து 865 ரூபாய் செலவிடப்பட்டுள்ளது என பதில் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக முதல் மந்திரி அலுவலகத்தினர் கூறுகையில், மந்திரிகள் மற்றும் அவர்களது துறை அதிகாரிகள், அந்தந்த துறைகளுக்கு வரும் விருந்தினர்களுக்கு என டீ மற்றும் ஸ்நாக்ஸ் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.

மேலும், ஜனதா தர்பார் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டங்கள் ஆகியவற்றின் போதும் டீ மற்றும் ஸ்நாக்ஸ் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. முதல் மந்திரி உத்தரவின் பேரிலேயே இவை வழங்கப்பட்டு வருகிறது என தெரிவித்துள்ளனர்.

இதேபோல், முந்தைய முதல் மந்திரியான ஹரீஷ் ராவத், கடந்த 2014-16-ம் ஆண்டுகளில் தனது முதல்வர் அலுவலகத்தில் டீ மற்றும் ஸ்நாக்ஸ் வகையறாக்களுக்கு என ரூ.1.5 கோடி செலவு செய்ததாக தகவல் உரிமை சட்டம் வாயிலாக தெரியவந்தது குறிப்பிடத்தக்கது.