கவுண்டம்பாளையம்:
கோவை கவுண்டம்பாளையம் அடுத்துள்ள இடையார் பாளையம் மாகாளியம்மன் திடலில் தி.மு.க. கவுண்டம்பாளையம் பகுதி சார்பாக தி.மு.க. தலைவர் கருணாநிதியின் சட்ட மன்ற வைரவிழா மற்றும் 94- வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.
சிறப்பு விருந்தினராக தி.மு.க கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை தலைவரும் எம்.எல்.ஏ.வு மான நடிகர் வாகை சந்திரசேகர் கலந்துகொண்டு பேசினார்.
அப்போது வாகை சந்திரசேகர் பேசியதாவது:-
இன்னும் 3 அல்லது 6 மாதத்திற்குள் எடப்பாடி அரசு கவிழ்ந்து விடும். வருகிற தேர்தலில் தி.மு.க வெற்றி பெற்று செயல் தலைவர் ஸ்டாலின் ஆட்சி அமைப்பது உறுதி. அப்போது நமது தலைவர் கருணாநிதி ஸ்டாலினை பாராட்டி பேசுவதை நாம் அனைவரும் காண போகிறோம்.
ஸ்டாலினின் தலைமையில் தமிழகம் முழுவதும் குட்டை, குளப்பகுதிகள் தூர்வாரப் பட்டு வருகிறது. தி.மு.க ஆட்சியில் உள்ளாட்சி துறையில் பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டன. ஆனால் தற்போது உள்ளாட்சி துறை இயங்குவதாக தெரியவில்லை. தமிழ் வளர்ச்சிக்கு உறுதுணையாக நின்றவர் கருணாநிதி. இந்தியை மத்திய அரசு தமிழகத்திற்குள் கொண்டு வருமானால் மீண்டும் இந்தி எதிர்ப்பு போராட்டம் நடைபெறும்.
இவ்வாறு வாகை சந்திர சேகர் பேசினார்.