விவசாயிகள் ரெயில் மறியல் போராட்டம் 
செய்திகள்

விவசாயிகள் ரெயில் மறியல், உரிமை மீறல் நோட்டீசுக்கு இடைக்கால தடை உள்ளிட்ட முக்கிய செய்திகள்- வீடியோ தொகுப்பு

சட்டசபைக்குள் குட்கா கொண்டு வந்த விவகாரம் குறித்து மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 18 திமுக எம்எல்ஏக்களுக்கு அனுப்பப்பட்ட உரிமை மீறல் நோட்டீசுக்கு ஐகோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளது.

சென்னை:

இன்றைய முக்கிய செய்திகள் வருமாறு:-

வேளாண் மசோதாக்களுக்கு எதிராக பஞ்சாப் விவசாயிகள் ரெயில் மறியல்- 28 ரெயில்கள் ரத்து

வேளாண் மசோதாக்களுக்கு எதிராக பஞ்சாப் மாநிலத்தில் விவசாயிகள் மூன்று நாள் ரெயில் மறியல் போராட்டத்தை தொடங்கினர். பல்வேறு இடங்களில் விவசாயிகள் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இதனால் பஞ்சாப் மாநிலத்தில் 28 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

கர்நாடகத்தில் வருகிற 28-ந் தேதி முழுஅடைப்பு: விவசாய சங்கங்கள் அறிவிப்பு

மத்திய-மாநில அரசுகளின் வேளாண் சட்ட திருத்த மசோதாவை கண்டித்து கர்நாடகத்தில் வருகிற 28-ந் தேதி முழுஅடைப்பு போராட்டம் நடைபெறும் என்று விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன.

தவறை ஏற்றுக்கொள்கிறேன், இனி மாஸ்க் அணிவேன்- வருத்தம் தெரிவித்த மத்திய பிரதேச மந்திரி

மாஸ்க் அணிய மாட்டேன் என கூறிய மத்திய பிரதேச உள்துறை மந்திரி நரோத்தம் மிஸ்ரா, தனது தவறை ஏற்றுக்கொண்டு வருத்தம் தெரிவித்தார். இனி மாஸ்க் அணிவதாகவும் கூறி உள்ளார்.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 57.32 லட்சமாக உயர்வு- 81.5 சதவீத நோயாளிகள் குணமடைந்தனர்

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 57.32 லட்சமாக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 86,508 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,129 பேர் மரணம் அடைந்துள்ளனர். கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 91,149 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் கொரோனா பாதிப்பில் இருந்து 81.5 சதவீத நோயாளிகள் குணமடைந்துள்ளனர். கடந்த 6 தினங்களாக புதிய நோயாளிகள் எண்ணிக்கையை விட தினசரி குணமடையும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

ரூ.666 கோடி அடுக்கு மாடி கட்டிட திட்டத்தில் ஊழல்: எடியூரப்பா மீது காங்கிரஸ் பரபரப்பு குற்றச்சாட்டு

பெங்களூரு வளர்ச்சி ஆணையத்தின் ரூ.666 கோடி அடுக்குமாடி கட்டிட திட்டத்தில் ஊழல் நடந்துள்ளதாக எடியூரப்பா மீது கர்நாடக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார்.

மு.க.ஸ்டாலின் உள்பட 18 எம்.எல்.ஏ.க்களுக்கான உரிமை மீறல் நோட்டீசுக்கு இடைக்கால தடை-ஐகோர்ட் உத்தரவு

சட்டசபைக்குள் குட்கா கொண்டு வந்த விவகாரம் குறித்து மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 18 திமுக எம்எல்ஏக்களுக்கு அனுப்பப்பட்ட உரிமை மீறல் நோட்டீசுக்கு ஐகோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளது. மேலும், இந்த வழக்கு தொடர்பாக சபாநாயகர், சட்டசபை செயலாளர் மற்றும் உரிமைக்குழு தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் பதில் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

விஜயகாந்திற்கு கொரோனா தொற்று- மருத்துவமனை அறிக்கை

தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும், அவர் முழுமையாக குணமடைந்து விரைவில் வீடு திரும்புவார் என்றும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. விஜயகாந்த் உடல்நிலை குறித்து தொலைபேசி வாயிலாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டறிந்தார். 

ஜெயலலிதா நினைவிடத்தில் பீனிக்ஸ் பறவை வடிவமைக்கும் பணி நிறைவு

மறைந்த முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அமைக்கப்பட்டு வந்த பீனிக்ஸ் பறவை வடிவமைக்கும் பணி  நிறைவடைந்துள்ளது. மெருகேற்றும் பணிகள் தீவிரமாக நடந்து வரும்  நலையில், அக்டோபர் 2-வது வாரத்தில் பணிகள் முடிக்கப்பட்டு நினைவிடம் அரசிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

குஜராத்தில் மூடப்பட்ட தமிழ் பள்ளியை திறக்க ஏற்பாடு செய்ய வேண்டும் -ராமதாஸ்

குஜராத்தில் உள்ள தமிழ் பள்ளியை மூடியது வேதனை அளிப்பதாக பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறி உள்ளார். தமிழக அரசு குஜராத் அரசை தொடர்பு கொண்டு ஆமதாபாத்தில் மூடப்பட்ட தமிழ் பள்ளியை திறக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

பார்சல் ரெயில் பெட்டிகளில் முன்பதிவு செய்யும் வசதி- கோட்ட மேலாளர் லெனின் தகவல்

வணிகர்கள் தங்களது சரக்குகளை அனுப்ப பார்சல் ரெயில் பெட்டிகளில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என மதுரை கோட்ட ரெயில்வே மேலாளர் லெனின் தெரிவித்துள்ளார்.

நான் ஜனாதிபதியான பிறகு ‘எச்1பி’ விசா குறித்த இந்தியர்களின் கவலை நீங்கும் - ஜோ பைடன் உறுதி

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தான் வெற்றி பெற்று பதவிக்கு வந்தால், ‘எச்1பி’ விசா குறித்த இந்தியர்களின் கவலைகள் போக்கப்படும் என, ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஜோ பைடன் உறுதியளித்தார்.

அமெரிக்காவில் 4 கொரோனா தடுப்பூசிகள் இறுதிகட்ட பரிசோதனையில் உள்ளது - டிரம்ப் தகவல்

அமெரிக்காவில் 4 கொரோனா தடுப்பூசிகள் இறுதிகட்ட பரிசோதனை நிலையில் உள்ளது என அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

விஷம் வைத்து கோமா நிலைக்கு தள்ளப்பட்ட ரஷிய எதிர்க்கட்சி தலைவர் ஆஸ்பத்திரியில் இருந்து ‘டிஸ்சார்ஜ்’

விஷம் வைத்து கோமா நிலைக்கு தள்ளப்பட்ட ரஷிய எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னியின் உடல் நிலை முழுமையாக தேறியதை தொடர்ந்து ஆஸ்பத்திரியில் இருந்து ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டார்.

9 லட்சத்து 82 ஆயிரம் பேர் பலி - தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா உயிரிழப்புகள்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 3.21 கோடியை தாண்டி உள்ளது. கொரோனா பாதிப்பினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 லட்சத்து 82 ஆயிரத்தை கடந்துள்ளது. மருத்துவமனையில் 62 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தீவிர சிகிச்சையில் உள்ளனர்.

டோனியின் கேப்டன்ஷிப்பை மதிப்பிட சொன்னால் 10-க்கு 4 மதிப்பெண் தான் வழங்குவேன் - ஷேவாக்

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இமாலய இலக்கை நோக்கி ஆடிய போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனி 7-வது வரிசையில் பேட்டிங் செய்தது பெரும் விவாதத்திற்குள்ளாகி இருக்கிறது. இந்த ஆட்டத்தில் சென்னை கேப்டன் டோனி இலக்கை எட்டும் நோக்குடன் பேட்டிங் செய்யவில்லை என்று முன்னாள் வீரர் ஷேவாக் குற்றம் சாட்டியுள்ளார். இந்த ஆட்டத்தை பொறுத்தவரை டோனியின் கேப்டன்ஷிப்பை மதிப்பிட சொன்னால், 10-க்கு 4 மதிப்பெண் தான் வழங்குவேன் என்றும் கூறி உள்ளார்.

தியேட்டரில் ரிலீசாகும் விஜய்சேதுபதியின் க/பெ ரணசிங்கம்

விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் க/பெ ரணசிங்கம் திரைப்படம் டிரைவ்-இன் தியேட்டரில் ரிலீசாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சூர்யா-ஜோதிகா பற்றி அவதூறு... இயக்குனர் மீது ரசிகர்கள் புகார்

நடிகர் சூர்யா மற்றும் அவரது மனைவி ஜோதிகாவை பற்றி அவதூறு பரப்புவதாக சினிமா இயக்குனர் மீது ரசிகர்கள் புகார் அளித்துள்ளனர்.