மீட்கப்பட்ட ஐம்பொன் சிலை. 
செய்திகள்

போளூர் அருகே கோவிலில் கொள்ளை போன ஐம்பொன் சிலை ஏரியில் மீட்பு

போளூர் அருகே கோவிலில் கொள்ளை போன ஐம்பொன் சாமி சிலை ஏரியில் மீன் பிடித்தபோது வலையில் சிக்கியது.

மாலை மலர்

போளூர்:

போளூர் அடுத்த வசூர் கிராமத்தில் செல்லியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 2 ஆண்டுக்கு முன்பு மர்ம கும்பல் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர் அங்கிருந்த உற்சவர் செல்லியம்மன் ஐம்பொன் சிலையை கொள்ளையடித்து சென்று விட்டனர். இந்த சிலை 2 அடி உயரம் 45 கிலோ எடை கொண்டதாகும். கொள்ளை போன சிலையை மீட்க போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் போளூர் நடசேன் தெருவை சேர்ந்த முத்து குமரன் இவர் அதே பகுதியில் உள்ள கூர்ஏரியில் இன்று காலை மீன்பிடிக்க சென்றார். மீன்பிடித்து கொண்டிருந்த போது வலையில் சுமார் 2 அடி உயரம் 45 கிலோ எடை கொண்ட ஐம்பொன் சிலை வலையில் சிக்கியது.

இதையடுத்து போளூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அங்கு வந்த போலீசார் சிலையை கைப்பற்றி தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர். தாசில்தார் பாலாஜி தலைமையில் சாமி சிலைக்கு பூஜை செய்யப்பட்டது.

இது குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருடுபோன போளூர் அடுத்த வசூர் செல்லியம்மன் கோவில் சிலை என்பது தெரிய வந்தது. சிலையை கடத்திய கும்பல் ஏரியில் சிலையை பதுக்கி வைத்துள்ளனர்.

மீட்கப்பட்ட சிலையை மீண்டும் கோவிலுக்கு கொண்டு வர வசூர் கிராம மக்கள் தாலுகா அலுவலகத்துக்கு சென்றனர்.சிலையை கொள்ளையடித்து ஏரியில் பதுக்கிய மர்ம நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.