செய்திகள்

சட்டவிரோத தொலைபேசி இணைப்பகங்கள் மூலம் பாகிஸ்தானுக்கு ராணுவ ரகசியங்கள் பரிமாற்றம் - 2 பேர் கைது

சட்டவிரோதமாக தொலைபேசி இணைப்பகங்கள் நடத்தி பாகிஸ்தானுக்கு ராணுவ ரகசியங்களை பரிமாறியதாக மராட்டிய மாநிலத்தில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

மாலை மலர்

லாத்தூர்:

சட்டவிரோதமாக தொலைபேசி இணைப்பகங்கள் நடத்தி பாகிஸ்தானுக்கு ராணுவ ரகசியங்களை பரிமாறியதாக மராட்டிய மாநிலத்தில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

மராட்டிய மாநிலம் லாத்தூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக தொலைபேசி இணைப்பகம் செயல்பட்டு வருவதாகவும், அங்கிருந்து ராணுவ ரகசியங்கள் பாகிஸ்தான் ராணுவத்துக்கு பரிமாறப்படுவதாகவும் காஷ்மீரை சேர்ந்த ராணுவ உளவு ஏஜென்சியிடம் இருந்து மராட்டிய பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதைத்தொடர்ந்து, தொலைத்தொடர்பு துறை ஊழியர்களுடன் சேர்ந்து போலீசார் லாத்தூர் மாவட்டம் தியோனி மற்றும் சாகுர் தாலுகாக்களில் அதிரடி சோதனை நடத்தினர். இதில், தியோனி தாலுகா பிரகாஷ் நகரிலும், சாகுர் தாலுகாவிலும் கடந்த 6 மாதங்களாக செயல்பட்டு வந்த இரண்டு சட்டவிரோத தொலைபேசி இணைப்பகங்களை போலீசார் கண்டறிந்தனர்.

அங்கு டெலிபோன் இணைப்பு இன்றி, கம்ப்யூட்டரில் இணையதள வசதியை பயன்படுத்தி, வெளிநாடுகளில் இருந்து வரும் அழைப்புகளை இந்தியாவில் உள்ள நபர்களுக்கு மாற்றம் செய்ததும், முக்கியமான ராணுவ ரகசியங்களை பாகிஸ்தானுக்கு பரிமாறியதும் தெரியவந்தது.

மேலும், இந்த சட்டவிரோத தொலைபேசி இணைப்பகங்களில் இருந்து 96 சிம் கார்டுகள், கம்ப்யூட்டர், அழைப்புகளை மாற்றுவதற்கான எந்திரங்கள் உள்பட ரூ.4 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

இந்த தொலைபேசி இணைப்பகங்கள் மூலமாக மத்திய அரசுக்கு ரூ.15 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாக தொலைத்தொடர்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கு காரணமான சங்கர் பிரதார் (வயது 33) மற்றும் ரவி சப்டே (27) ஆகிய இருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.