செய்திகள்

ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் திருப்பதி லட்டு விலை உயருகிறது

ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் திருப்பதி லட்டு, பிரசாதம், வாடகை அறை கட்டணம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி அனில்குமார் சிங்கால் கூறினார்.

மாலை மலர்

திருப்பதி:

திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி அனில்குமார் சிங்கால், செய்தியாளர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

திருப்பதிக்கு வரும் பக்தர்களுக்கு, தேவஸ்தானம் குறைந்த விலையில் வாடகை அறை, மானிய விலையில் லட்டு, நாள் முழுவதும் அன்னதானம், சிற்றுண்டி, பால், காபி, டீ, மோர் ஆகியவற்றை இலவசமாக வழங்கி வருகிறது.

இந்நிலையில் நாடு முழுவதும் ஜி.எஸ்.டி. வரி விதிப்பை வரும் ஜூலை 1-ந் தேதி முதல் மத்திய அரசு அமல்படுத்துகிறது. இதற்கு முன்னர் சேவை வரியிலிருந்து திருமலை-திருப்பதி தேவஸ்தானத்துக்கு விலக்கு அளிக்கப்பட்டிருந்தது.

ஆனால், ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு இனி திருப்பதி தேவஸ்தானத்துக்கும் பொருந்தும். இதனால், திருப்பதியில் உள்ள வாடகை அறைகள், லட்டு பிரசாதம் உள்ளிட்டவற்றின் விலை உயர வாய்ப்புள்ளது.

மேலும், தேவஸ்தானத்துக்கு ஏற்படும் நஷ்டத்தை எவ்வாறு சமாளிப்பது என அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. திருப்பதி மாட வீதியில் உள்ள 160 கண்காணிப்பு கேமராக்களை அகற்றிவிட்டு, நவீன ரக கேமராக்களை பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

திருப்பதிக்கு வரும் அனைத்து பக்தர்களும் தங்களது ஆதார் அட்டையை தவறாமல் கொண்டு வந்தால், தேவஸ்தானம் வழங்கும் அனைத்து சேவைகளையும் எளிதாக பெற முடியும். வருங்காலத்தில், அனைத்து விதமான தரிசனங்களுக்கும் ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.