புதுச்சேரி:
எம்.பி. அல்லது எம்.எல்.ஏ.க்கள் ஆதாயம் தரும் வகையிலான இன்னொரு அரசு பதவியில் இருந்தால் அவர்களின் எம்.பி.- எம்.எல்.ஏ. பதவியை பறிக்கலாம் என சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் ஏற்கனவே சோனியாகாந்தி, ஜெயாபச்சன் ஆகியோர் எம்.பி. பதவியை இழந்தனர்.
இப்போது டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ.க்கள் 20 பேர் சட்டமன்றத்தின் பாராளுமன்ற செயலாளர் பதவியை வகித்ததால் இது, ஆதாயம் தரும் பதவி என்று அவர்களுடைய எம்.எல்.ஏ.க்கள் பதவி பறிக்கப்பட்டுள்ளது.
இதே போல் புதுவையில் 8 எம்.எல்.ஏ.க்கள் தங்களுடைய எம்.எல்.ஏ. பதவி தவிர, வேறு அரசு பதவியிலும் உள்ளனர். காங்கிரஸ் எம்.எல்.ஏ. லட்சுமி நாராயணன் பாராளுமன்ற செயலாளர் என்ற பதவியிலும், ஜெயமூர்த்தி, தீப்பாய்ந்தான், தனவேலு, விஜயவேணி, பாலன், தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சிவா, கீதா ஆனந்து ஆகியோர் வாரிய தலைவர் பதவியிலும் உள்ளனர்.
இவர்களில் பாலன் மட்டும் ஒரு ஆண்டு வாரிய தலைவர் பதவி வகித்த நிலையில் தற்போது பதவி நீட்டிப்புக்கு பிறகு இன்னும் பதவி ஏற்காமல் உள்ளார்.
இவர்கள் 8 பேரும் ஆதாயம் தரும் பதவியில் இருப்பதாகவும், எனவே அவர்களையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று அ.தி.மு.க., பாரதிய ஜனதா கட்சியினர் கூறி உள்ளனர்.
மேலும் இது சம்பந்தமாக டெல்லி தலைமை தேர்தல் கமிஷனரிடமும் புகார் கொடுக்க போவதாக அறிவித்துள்ளனர். இதனால் 8 பேரின் பதவியும் பறிபோகுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஆனால், இவர்கள் 8 பேரும் வகிக்கும் பதவி ஆதாயம் தரும் பதவி அல்ல என்று ஏற்கனவே சட்டம் கொண்டு வந்து அதற்கான ஒப்புதலை ஜனாதிபதியிடம் பெற்றிருப்பதாக கூறுகின்றனர். இதனால் அவர்களின் பதவி பறிபோகாது என்று காங்கிரசார் கூறுகிறார்கள்.
இது சம்பந்தமாக காங்கிரசின் மாநில செயலாளரும், வக்கீலுமான சாம்ராஜ் கூறியதாவது:-
புதுவை சட்டமன்றத்தின் பாராளுமன்ற செயலாளர் பதவி ஆதாயம் தரும் பதவி அல்ல என்று 1971-ம் ஆண்டே சட்டம் கொண்டு வரப்பட்டு அது உள்துறை மூலமாக ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.
அதன் பிறகு 1994-ல் 6 வாரிய தலைவர்கள் பதவிகள் ஆதாயம் தரும் பதவி அல்ல என்று இதே போல் சட்டம் கொண்டு வந்து ஜனாதிபதியிடம் ஒப்புதல் பெறப்பட்டு இருக்கிறது.
2009-ம் ஆண்டு 65 வாரிய மற்றும் சொசைட்டி பதவிகள் ஆதாயம் தரும் பதவிகள் அல்ல என சட்டம் இயற்றி அதற்கும் ஜனாதிபதியிடம் ஒப்புதல் பெறப்பட்டது. இவ்வாறு புதுவையில் 72 பதவிகளுக்கு சட்ட பதுகாப்பு பெறப்பட்டுள்ளது.
எனவே, இவை ஆதாயம் தரும் பதவிகளாக கருதப்படாது. அவர்கள் பதவி இழப்பதற்கான எந்த வாய்ப்பும் இல்லை. மேலும் புதுவை யூனியன் பிரதேசம் என்பதால் மத்திய உள்துறையிடம் அனுமதி பெற்று அவர்கள் மூலம்தான் நியமனமே நடக்கிறது. இதனால் வாரிய தலைவர் பதவி வகிப்பவர்களை எம்.எல்.ஏ. பதவியை பறிப்பதற்கான எந்த வாய்ப்பும் இல்லை. எல்லாமே சட்ட பாதுகாப்பு கொண்ட நியமனமாகவே இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.