இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஏ.என்.32 ரக விமானம் ஒன்று கடந்த 3-ந்தேதி, 13 பேருடன் அசாமில் இருந்து புறப்பட்டது. அது கிளம்பிய அரைமணி நேரத்தில் அருணாச்சல பிரதேசத்தில் சீன எல்லையோரம் மாயமானது. இந்த விமானத்தை தேடும் பணிகள் உடனடியாக தொடங்கப்பட்டன.
இந்த தேடும் பணிகளில் விமானப்படை விமானங்கள், ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டன. இதேபோல் ராணுவம், இந்தோ-திபெத் படையினர் மற்றும் மாநில போலீசார், உள்ளூர் மக்களுடன் இணைந்து அருணாச்சல பிரதேசத்தின் சியாங் மாவட்டத்தை மையமாக கொண்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். மோசமான வானிலை காரணமாக தேடுதல் பணியில் சிறிது தொய்வு ஏற்பட்டது.
இருப்பினும் தொடர்ந்து தேடுதல் பணி நடைபெற்றது. இதனிடையே கடந்த திங்களன்று அருணாச்சல பிரதேசத்தின், சியாங் மாவட்டத்தில் உள்ள கட்டி என்ற கிராமம் அருகே விமானத்தின் பாகங்கள் சிதைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டன. இதையடுத்து விமானத்தின் உதிரி பாகங்கள் கண்டெடுக்கப்பட்ட இடத்திற்கு மீட்புக்குழுவினர் இன்று காலை சென்றனர்.